KD பிரதர்ஸ் பனிப்போர்.. நழுவிக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்.. முழு பிரச்னையும் இதுதான்
கலாநிதி மாறன் மீது தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில் சவுக்கு சங்கர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

சன் குழுமத்தில் கலாநிதி மாறன் பங்குகளை முறைகேடாக தனதாக்கிக் கொண்டதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஊடகங்களில் வெளியான தகவலின்படி மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சுயநினைவு இல்லாமல் அமெரிக்காவில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டார். அப்போது சன் குழுமத்தில் இருந்த 60 சதவீத பங்கை கலாநிதி மாறன் முறைகேடாக ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
இந்நிலையில், தயாநிதி மாறன் அனுப்பியுள்ள நோட்டீஸில், கடந்த 2023ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் 5,926 கோடி ரூபாய் ஆதாயம் அடைந்ததாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 455 கோடி ரூபாய் பெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சன் டிவி தொடங்கப்பட்டதில் இருந்தே கலாநிதி மாறன் ஊதியம் பெறும் ஒரு ஊழியராகவே செயல்பட்டு வந்துள்ளார். இதில் அவருக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அதில் பல நிபந்தனைகளையும் விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாறன் சகோதரர்கள் பிரச்னை பனிப்போர் மூண்டிருப்பதால் திமுகவிற்கு ஆபத்தை தரும் என்றும் கணிக்கப்படுகிறது.
சன் டிவி உருவான கதை
இந்நிலையில், மாறன் சகோதரர்கள் வளர்ந்த விதம் குறித்தும் சன் டிவி குறித்தும் சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சவுக்கு சங்கர்,"சன் டிவி வந்து வளர்ந்ததற்கு முக்கிய காரணமே திமுக தான். கலைஞர் குடும்பம் இல்லையென்றால் சன் டிவி என்பது இல்லாமல் போயிருக்கும். முரசொலியின் நிலத்தை அடகு வைத்து தொடங்கப்பட்டது தான் சன் டிவி. தற்போது இருக்கும் கலைஞர் டிவி அலுவலகம் தான், அப்போதைய சன் டிவி இருந்தது என தெரிவித்தார்.
எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி
முதன் முதலில் நான் தான் இவர்களுக்கு கேடி பிரதர்ஸ் என்ற பெயர் வைத்தேன். இதை பெருமைக்காக சொல்லவில்லை. மாறன் சகோதரர்கள் கேபிள் கனெக்சன் மூலம் பல அட்டூழியங்களை செய்துள்ளனர். நான் மட்டும் தான் வளர வேண்டும் என்ற ஆணவத்தோடு 2006 -2011 வரை இருந்தனர். ஆனால், மாறன் சகோதரர்கள் குறித்த ப்ரேக்கிங் செய்தி வந்த போது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. நான் மட்டும் இல்லை இங்கிருக்கும் புதிய தலைமுறை செய்தி மகிழ்ச்சியோடு செய்தியை வாசித்ததாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார். புதிய தலைமுறை சேனலை தொடங்க விடாமல் தொல்லை தந்தது மாறன் சகோதரர்கள் என சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார்.
சிக்கன் சாப்பிட்டால் பீவர்
சன் நியூஸ் மூலம் பல அட்டூழியங்களை செய்துள்ளனர். சிக்கன் சாப்பிட்டால் பீவர் வரும் என்ற செய்தியை பரப்பி கோழி பண்ணை வைத்திருப்போரிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டிருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார். மேலும் மாறன் சகோதரர்கள் பிரச்னை கலைஞரிடம் சென்றிருந்தால் நடந்திருப்பது வேறு. ஆனால், ஸ்டாலின் இதில் தலையிடாமல் குடும்ப பிரச்னை என்று கை கழுவி விட்டார். கலாநிதி மாறன் தயாநிதி மாறனை ஏமாற்றியிருப்பது உறுதியாகியிருக்கிறது. இதில், மேலும் ஒரு தகவலாக அமலாக்கத்துறை வந்தால் மாறன் சகோதரர்களின் வண்டவாளம் முழுவதும் தெரிந்துவிடும் என சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார்.





















