(Source: ECI/ABP News/ABP Majha)
இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன? - விளக்கமாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட எஸ். ஜெய்சங்கர், இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசினார். சீன, பாகிஸ்தான் பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும் என அவர் உறுதி அளித்தார்.
மோடியின் புதிய அரசாங்கம் நேற்று முன்தினம் பதவியேற்றது. அவருடன் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சர்களின் இலாக்கா விவரம் நேற்று வெளியிடப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, முக்கிய துறைகள் அனைத்தும் அதே அமைச்சர்களிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எஸ். ஜெய்சங்கருக்கு அதே வெளியுறவுத்துறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட எஸ். ஜெய்சங்கர், இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசினார்.
இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன? சீன எல்லையில் நிலவும் மீதமுள்ள பிரச்னைகளிலும் பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னையிலும் கவனம் செலுத்தப்படும் என ஜெய்சங்கர் தெரிவித்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பாரதத்திற்கு முக்கியத்துவம், வசுதேவ குடும்பம் (உலகம் ஒரே குடும்பம்) ஆகியவை இந்திய வெளியுறவுக் கொள்கையின் இரண்டு வழிகாட்டும் கோட்பாடுகளாக இருக்கும்.
ஒன்றாக, நம்மை 'விஷ்வ பந்து'-வாக (உலகின் நண்பர்) நிலைநிறுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். மிகவும் கொந்தளிப்பான உலகில், மிகவும் பிளவுபட்ட உலகில், மோதல்கள் மற்றும் பதட்டங்கள் நிறைந்த உலகில் அந்த நாடு உண்மையில் நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக நிலைநிறுத்தப்படும். பலரால், மதிப்பும் செல்வாக்கும் வளரும், அனைவரின் நலன்கள் முன்னேறும்" என்றார்.
சீனாவுடனான உறவு குறித்து பேசிய எஸ். ஜெய்சங்கர், "சீனாவைப் பொறுத்தமட்டில் எங்களின் கவனம் எஞ்சியுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதில் இருக்கும்" என்றார்.
பாகிஸ்தான் நாட்டுடனான உறவு குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், "பாகிஸ்தானுடன் பயங்கரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் அதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதில் கவனம் செலுத்துவோம்" என்றார்.
சீன, பாகிஸ்தான் பிரச்னைகள்: சீனா, இந்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, டோக்லாம் பிரச்னை வெடித்ததில் இருந்து, இந்திய - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே பலமுறை மோதல் வெடித்துள்ளது. இந்திய - சீன - பூட்டான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் சீனா சாலைகளை அமைக்க இந்தியாவும் பூட்டானும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு, கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதி கொண்டனர். இதில், இருதரப்பில் பலி எண்ணிக்கை பதிவானது.
வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.