தமிழக அரசின் சார்பில் இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள் - 4 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ் குழு அமைப்பு
23ஆம் தேதிக்கு பின் சென்னை துறைமுகத்தில் இருந்து செல்லும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது
இலங்கைக்கு, நிவாரண பொருட்களை அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொருளாதர நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறும் பொது மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதற்காக 123 கோடி செலவில் நிவாரணப் பொருட்களை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது, இந்திய உணவு பொருள் கழகத்திடம் இருந்து ஒரு கிலோ 20 ரூபாய் விகிதம் 40,000 டன் அரிசியும், தமிழக அரசின் நிறுவனமான ஆவினில் இருந்து 15 கோடிக்கு பால் பவுடர் மற்றும் மருத்துவ பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களில் இந்திய அரசின் அசோக முத்திரை மற்றும் தமிழ்நாடு அரசின் கோபுர முத்திரை இடம் பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு எடுத்து செல்வதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் ஜெசிந்தா லாசரஸ், பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த சுப்பையன், உணவுபொருட்கள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர், மருந்து பொருட்கள் கொள்முதல் நிறுவன இயக்குநர் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண பொருட்கள் கொண்டு சேர்ப்பதை இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட குழு உறுதி செய்யும்.
கொள்முதல் செய்யப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்காக துறைமுகத்தில் இருந்து தடையில்லா சான்றுகளை பெறும் பணிகள் நடந்து வரும் நிலையில் வரும் 23ஆம் தேதிக்கு பிறகு சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் சென்னை துறைமுகத்தில் இருந்து செல்லும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தமிழகம் உட்பட 15 மாநிலங்களில், ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல்