‘அதிமுகவுடன் ரகசிய கூட்டணி, உள்ளடி வேலை’ காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
”அதிமுகவிலிருந்து திமுகவை நம்பி வந்த முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, சுந்தர்ராஜனை மதிக்காதது மட்டுமின்றி, ஒபிஎஸ்-ம் ராமநாதபுரம் பக்கம் வராமல் காதர்பாட்சா கட்டம் கட்டுவதாக குமுறும் உடன்பிறப்புகள்”

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, திமுகவில் பரபரப்பாக வேட்பாளர் நேர்காணல் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட காதர்பாட்சா முத்துராமலிகத்திற்கு திமுக தலைமை சீட் கொடுக்கக் கூடாது என்று பொங்கி எழுந்திருக்கிறார்கள் அம்மாவட்ட உடன்பிறப்புகள்.
எதிர்க்கட்சியோடு மறைமுக டீலிங் – குமுறலில் உடன்பிறப்புகள்
அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமியுடன் மறைமுக டீலிங் போட்டுக்கொண்டு, கடந்த 2016 மற்றும் 2021 தேர்தலில் அவரது மனைவி கிருத்திகாவை முதுகளத்தூர் தொகுதியில் நிற்க சொன்னதே காதர்பாட்சா முத்துராமலிங்கம்தான் என்றும் இப்போதும் கூட அமைச்சர் ராஜகண்ணப்பனை தோற்கடிக்க அதேபோன்றதொரு டீலிங்கை காதர்பாட்சா, முனியசாமியிடம் போட்டுள்ளதாகவும் பரபரக்கின்றனர் திமுகவினர். குறிப்பாக, திமுகவில் இருந்து அதிமுகவிற்கு சென்ற மலேசியா பாண்டியனை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக நிறுத்த காதர்பாட்சா டீலிங் பேசிவருவதாகவும், கிருத்திகாவை இந்த முறை திருவாடனை தொகுதியில் போட்டியிட சொல்லி காதர் பாட்சா அறிவுறுத்தியிருப்பதாகவும் பொறுமிவருகிறார்கள் உண்மையான திமுக விசுவாசுகள். திருவாடனையில் காங்கிரஸ் கட்சியோ அல்லது கூட்டணி கட்சியில் ஏதோ ஒன்றோதான் வேட்பாளரை நிறுத்தும் என்பதால், எளிதாக அதிமுகவின் கிருத்திகா வெற்றி பெறலாம் என்றும், மற்றபடி தேர்தல் பணிகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் அதிமுகவிடம் முனியசாமியிடம் காதர்பாட்சா டீல் பேசியிருப்பதாக அந்த மாவட்ட நிர்வாகிகள் வேதனையுடன் பேசி வருகிறார்கள்.
அதிமுக மணிகண்டனுக்கு பதில் பாஜக – காதர்பாட்சாவின் பலே திட்டம்
அதே நேரத்தில் தனக்கு எதிராக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் போட்டியிடக் கூடாது என்பதற்காக ராமநாதபுரத்தை பாஜகவிற்கு ஒதுக்கும்படி அதிமுக முனியசாமி மூலம் காதர்பாட்சா காய்நகர்த்தி வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஒபிஎஸ்-க்கு எதிராகவும் காதர்பாட்சா சதி ?
குறிப்பாக, மறவர் சமூகத்தை சேர்த ஒ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதிக்கு போட்டியிட வந்துவிட்டால், தன்னுடைய செல்வாக்கு சரிந்துவிடும் என்பதற்காக அவருக்கு எதிராகவே பல உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாகவும், ஒபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க அங்கே வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய அளவில் கூட்டம் கூடாமலும், நிகழ்ச்சியை சொதப்பியும் அவருக்கு எதிராக கட்டம் கட்டியதும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமநாதபுரத்தின் ராஜாவா? காதர்பாட்சா!?
ரமநாதபுரத்தை பொறுத்தவரை தானே ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக நிர்வாகிகளை கூட அரவணைத்துச் செல்லாமல் பல்வேறு உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாகவும், அமைச்சர் ராஜகண்ணப்பனை இந்த முறை தோற்கடித்துவிட்டால் தான் அமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு சித்து வேலைகளை காதர்பாட்சா முத்துராமலிங்கம் பார்த்து வருவதாகவும் ராமநாதபுர திமுக உடன்பிறப்புகள் பொறுமி வருகின்றனர். குறிப்பாக, ’ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்று திமுக உருவாக்கியுள்ள முழக்கத்தையே மாற்றி, ’முத்துராமலிங்கம் தொடரட்டும், ராமநாதபுரம் வெல்லட்டும்’ என்று அறிவாலயத்திலேயே தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து முழக்கமிட செய்யும் அளவிற்கு தன்னை அந்த மாவட்டத்தின் மன்னர் என்றே கருதியிருக்கிறார் முத்துராமலிங்கம் என்பதும் திமுகவினரின் குமுறலாக இருக்கிறது.
திமுக தலைமையின் கண்களுக்கு முத்துராமலிங்கத்தின் பிரச்னைகள் தெரியாதது ஏன் ?
கட்சியில் உள்ளடி வேலைகள், நிர்வாகிகளை கட்டம் கட்டி காலிச் செய்வது, அமைச்சர் ராஜகண்ணப்பன், ஒபிஎஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சதி செய்வது, எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பது உள்ளிட்ட காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் அத்தனை சகுனி வேலைகளையும் யாரிடம் சொல்வது என்று கூட தெரியாமல் அம்மாவட்ட நிர்வாகிகள் விழிப்பிதுங்கி நிற்பதாகவும், அதிமுகவில் இருந்து திமுகவை நம்பி வந்த முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, சுந்தர் ராஜன் உள்ளிட்ட யாருக்கும் எந்த முக்கியத்துவமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் காதர் பாட்சா கொடுக்காததால் அவர்களுமே கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்களுக்கும், அவரின் கவனத்திற்கும் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் கட்சி விரோத நடவடிக்கைகள் செல்லாதது ஏன் என்ற கேள்வியும் திமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
காதர்பாட்சாவிற்கு சீட் மறுப்பா?
கடந்த 2024ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்த முயன்ற வழக்கில் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் பெயரும் அரசல் புரசலாக அடிப்பட்டன. அந்த நேரத்தில் தனக்கு உடல்நலக்குறைவு என கூறி சென்னையில் சில காலம் தங்கியிருந்தார் காதர் பாட்சா என்ப்ற்ஊ அவர் மீது 900 கோடி ரூபாய் அளவிற்கான ஊழல் புகார் எழுந்துள்ளது குறித்து திமுக தரப்பில் எடுப்பட்ட சர்வே ரிப்போர்டில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் நேர்காணலில் பங்கேற்றாலும் அவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அறிவாலய வட்டார முக்கியஸ்தர்கள்.























