ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றவேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி சிகிச்சை அளித்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மறுபுறம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே கிராமப்புறங்களில் பலர் உயிரிழக்கும் துயரமும் நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கொரோனா சிகிச்சை குறித்த விழிப்புணர்வும், அதற்கான வசதிகளும் இல்லாததே இதற்கு காரணம்.
சென்னையில் நேற்று கொரோனா பாதிப்பு குறைந்து 5 ஆயிரத்து 559 ஆக உள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் தினசரி கொரோனா பரவல் குறைந்துள்ளது. இவை கணக்கில் காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள்தான், கணக்கில் காட்டப்படாமலும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற உண்மையே தெரியாமலும் ஏராளமான மககள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
மருத்துவ விழிப்புணர்வே இல்லாத கிராமங்களில், கொரோனா தொற்று ஏற்பட்டதே தெரியாமல் வாரத்திற்கு ஒருவர் உயிரிழப்பது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் கிராமங்களில் வாழும் மக்களில் பெரும்பான்மையினருக்கு கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. அவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அவர்கள் வெளியூர்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இல்லாததும்தான் உயிரிழப்புகளுக்கு காரணம். கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு மருத்துவ வசதியை ஏற்படுத்துவது மூலம்தான் கிராமப்புற மக்களை காப்பாற்ற முடியும். அதற்கு ஒரே வழி, கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவதுதான்.
தமிழ்நாடு முழுதும் கிராமங்களில் 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவை தவிர, 422 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 20 படுக்கைகளும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 50 படுக்கைகளும் கொண்ட முதல்நிலை கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்குவதன் மூலம் 57 ஆயிரத்து 120 படுக்கைகளை ஏற்படுத்தி மருத்துவம் வழங்க முடியும்.
தேவைப்பட்டால் கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை தற்காலிக மருத்துவ மையங்களாக மாற்றி மருத்துவம் அளிக்கலாம். கிராம நிர்வாக அதிகாரியிடம் அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் அங்கு சோதனை மற்றும் சிகிச்சை செய்ய வேண்டும். இவற்றின்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதுடன், நோய் தொற்று பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும். எனவே, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்நிலை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், கிராமங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.