அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
"பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸ் தான் செயல்படுவார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது"

"பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவராக செயல்படுவார் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது"
தந்தை மகன் மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதன் நிறுவனர் ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலால், பாமகவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருகின்றன. தங்களுக்கு மாம்பழம் சின்னம் கிடைத்ததாக, அன்புமணி ராமதாஸ் தரப்பு தொடர்ந்து தெரிவித்து வந்தது.
டெல்லியில் ராமதாஸ் ஆதரவாளர்கள்
இந்தநிலையில் தேர்தல் ஆணையம் மூலம் அன்புமணி ராமதாஸ் கிடைத்த அங்கீகாரத்தை ரத்து செய்து, எப்படியாவது தங்கள் தரப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என ராமதாஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து பலமுறை டெல்லியில் முகாமிட்டு, தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் மனுவை அளித்து வந்தனர். அதேபோன்று தனியாக பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியும், ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. இந்தநிலையில் ராமதாஸ் தரப்பின் புகார் மனுவிற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், அன்புமணி ராமதாசை கட்சி தலைவராக அங்கீகரித்துள்ளது.
அன்புமணிக்கு அங்கீகாரம்
ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி சேலம் அருள் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தை நாடி நாங்கள் தான் உண்மையான பாமக எங்கள் தரப்பை ஆதரிக்க வேண்டும் என மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில், அன்புமணி தரப்புக்கு தான் மாம்பழம் சின்னம் எனவும் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. தற்போது டாக்டர் ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்புமணி அதர்வாளர்கள் கருத்து என்ன ?
இதுகுறித்து அன்புமணி ஆதரவாளர்களிடம் விசாரித்த போது: ஒரு கட்சியின் தலைவரை பொதுக்குழு கூடி தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் தலைவராக இருந்தபோது, அவரை செயல் தலைவராக நியமனம் செய்ததே சட்டப்படி தவறு. அப்படி இருக்க செய்தியாளர்கள் சந்திப்பில், தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதாக ராமதாஸ் கூறியது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
பாமகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பேரும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே முழு அங்கீகாரம் வழங்கப்படும். அந்த வகையில் தேர்தல் ஆணையம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, அன்புமணி ராமதாசுக்கு தலைவர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதைதான் ஆரம்பத்தில் இருந்தே, வலியுறுத்தி வருகின்றோம். எங்கள் தலைமையில் இருப்பதுதான் உண்மையான பாமக. அன்புமணி ராமதாஸ் தான் வருகின்ற தேர்தலில், கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு ஏ ஃபார்ம் மற்றும் பி ஃபார்ம் ஆகியவற்றில் கையெழுத்து போட அதிகாரம் படைத்தவர் என தெரிவித்தனர்.
ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் ?
இத தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளர்களிடம் பேசவையில், ஏற்கனவே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அன்புமணி தரப்பு முறைகேடாக அங்கீகாரத்தை பெற்றதாக தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.






















