Annapoorna Srinivasan: “கோவை அன்னப்பூர்ணா உரிமையாளருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல்” அதிகார திமிர் என காட்டம்..!
”அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்கள் அதற்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்தரப்பிற்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றார்கள்”
கோவை அன்னப்பூர்ணா உரிமையாளர் சீனிவாசன்(Annapoorna Srinivasan) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரிய நிலையில். அவர் அதிகாரத்தால் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சீனிவாசனுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
ஆணவத்தின் உச்சம் – ராகுல் காந்தி
அதில், “கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிக நிறுவனத்தின் உரிமையாளர், ஒரு அரசாங்க பொது ஊழியரிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையைக் கேட்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும் அவமரியாதையுடன் எதிர்கொள்ளப்பட்டது.இன்னொருபுறம், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது, மோடி ஜி அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.
சிறு வணிகர்களை மத்திய பாஜக அரசு சிதைக்கிறது - ராகுல்
பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.அப்படி இருந்தும் அவர்கள் இவர்களிடமிருந்து கடைசியாக பெறுவது அவமானமாகதான் இருக்கிறது.
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்கள் அதற்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்தரப்பிற்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றார்கள்
மக்களின் பேச்சை கேட்க பாஜக அரசு மறுக்கிறது
MSMEகள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், மக்களின் பேச்சை அவர்கள் கேட்க மறுக்கின்றனர்.