Rahul Gandhi Case: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.. எம்.பியாக தொடர்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#BREAKING Supreme Court stays Congress leader Rahul Gandhi's conviction in the criminal defamation case over the 'Modi surname' remark.
— Live Law (@LiveLawIndia) August 4, 2023
The conviction in the case had led to his disqualification as MP.
#RahulGandhi pic.twitter.com/iGJyoodGWQ
கீழமை நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தீர்ப்பை அளித்த பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு “விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவுகள் அதிகபட்சமாக உள்ளது. அந்த தீர்ப்பு ராகுல் காந்தி பொது வாழ்வில் தொடர்வதற்கான உரிமையை மட்டுமின்றி, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏன்? தண்டனை காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தந்திருந்தாலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார். அதிகபட்ச தண்டனை தந்தது ஏன் என்பது பற்றி தீர்ப்பளித்த நீதிபதி எந்த காரணத்தையும் கூறவில்லை. எனவே, இறுதி தீர்ப்பு வரும் வரையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. ராகுல் காந்தியின் உரை நல்ல ரசனையுடன் இல்லை என்பதில் சந்தேகமில்லை, பொது வாழ்வில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு மனுவில் ராகுல் காந்தியின் பிரமாணப் பத்திரத்தை ஏற்கும் போது, அவர் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ” என தெரிவித்துள்ளனர்.
வழக்கு கடந்து வந்த பாதை:
கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது கர்நாடகாவில் மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தியுள்ளதாக என்று குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றமும் ராகுல் காந்தியின் கோரிக்கையை கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்தது.
அன்றே கணித்த காங்கிரஸ்:
இதுதொடர்பாக பேசியிருந்த காங்கிரஸ் கட்சியினர் குஜராத் மண்ணில் நீதி கிடைக்காது என்பது எங்களுக்கு தெரியும், வழக்கு எப்போது அங்கிருந்து வெளியே வருகிறதோ அப்போது தான் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தான், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
”