‛பாப்பா பாடும் பாட்டு... கேட்டு தலையை ஆட்டு...’ துர்கா பட பாணியில் பாஜக வேட்பாளர்!
Pudukottai Urban Local Body Election 2022: சாலையில் தள்ளாடி நடந்து வரும் வேட்பாளரை, உடன் வரும் பாஜக நிர்வாகிகள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழfநாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இன்னும் சில தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒவ்வொரு நாள் பிரச்சாரமும் மக்களை கவர்கிறதோ இல்லையோ... கலகலப்பாகி வருகிறது. அதில் எந்த கட்சியும் தப்பவில்லை. இந்த ஒரு விசயத்தில் தான், பாரபட்சம் இல்லாமல், தன் பங்கை வேட்பாளர்கள் செலுத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்ட வேட்பாளர்கள், புரோட்டா கடையில் புரோட்டா சுட்டது, பஜ்ஜி சுட்டது, டீ போட்டது, இளநீர் வெட்டியது என ஏதாவது ஒரு விசயத்தை செய்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதே வழியை தற்போது பின்பற்றும் உள்ளாட்சி வேட்பாளர்கள், ஒரு படி... இல்லை... இல்லை... பல படி கீழே இறங்கி... என்னென்னமோ செய்கிறார். இப்போது நாம் பார்க்கவிருப்பது, பாஜக வேட்பாளர் ஒருவரின் நூதன பிரச்சாரம் பற்றியது.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டில், ஏற்கனவே அறிவித்தபடி பாஜக தனித்து போட்டியிடுகிறது. அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்களை கட்டிக் கொண்டு ஒவ்வொரு வாக்காளர்களின் இல்லத்திற்குச் சென்று பிரச்சாரம் செய்கிறார். ஏன் இந்த முடிவு? அவரே சொல்கிறார்... ‛உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்த்த பிறகுதான் வாக்காளர்களின் முகத்தையே பார்பேன்....அதுவரை கண்களை கட்டிக்கொண்டு தான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்,’ என கறாராக கூறிவிட்டார்.
கண்களை கட்டிக் கொண்டு சாலையில் தள்ளாடி நடந்து வரும் வேட்பாளரை, உடன் வரும் பாஜக நிர்வாகிகள் கைத்தாங்கலாக ஒவ்வொரு இல்லத்திற்கும் அழைத்துச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு போதிய நேரம் இல்லை.. கொஞ்சம் நாள் தான் இருக்கு என எஞ்சியிருக்கும் வேட்பாளர்கள் எல்லாம் போட்டி போட்டு, பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது, நம்ம வேட்பாளர் நூதனம்கிற பேர்ல, இப்படி தள்ளாடிட்டு இருக்கிறார். 10 வீட்டுக்கு பிரச்சாரம் செய்யப் போகிற நேரத்தில், ஒரு வீட்டுக்கு தான் போக முடியுது என நொந்து கொள்கிறார்கள், உடன் வருபவர்கள்.
துர்கா படத்தில், கண்களை கட்டிக்கொண்டு, ‛பாப்பா படும் பட்டு... கேட்டு தலையை ஆட்டு...’ அப்படினு ஒரு பாட்டு வரும். அந்த மாதிரி, கண்களை கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வரும் பாஜக வேட்பாளரின் நூதன பிரச்சாரம் ஒரு தரப்பினரை மகிழ்த்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்