புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வாகனத்தை வழிமறித்து நிர்வாகிகள் போராட்டம்
புதுச்சேரி: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வாகனத்தை வழிமறித்து நிர்வாகிகள் போராட்டம்
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் பகிரங்கமாக வலுத்து வருகிறது. மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். மாநில தலைவரை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உடனே மாற்ற வேண்டும், புதுவை காங்கிரஸ் கட்சியில் நாராயணசாமியின் தலையீட்டை அனுமதிக்க கூடாது என்று முன்னாள் அமைச்சர்கள் தரப்பினர் போர் கொடி தூக்கினர். மேலும், இவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு புகார் கடிதமும் அனுப்பினர். இந்நிலையில் அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று புதுவை வந்தார்.
'ஆவணங்களை காணோமா? ஷாக்கான நீதிபதி' - பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை வழக்கில் திடீர் திருப்பம்!
காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பேச வேண்டும் என வலியுறுத்தினர். அவர் கூட்டத்தில் பங்கேற்று மீண்டும் வந்து பேசுவதாக கூறினார். இதையடுத்து அவர் கூட்டத்திற்கு செல்ல அதிருப்தியாளர்கள் அனுமதித்தனர். இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் 2 மணி நேரம் ஆகியும் கூட்டம் முடிந்து வெளியில் வரவில்லை. இதனிடையே தினேஷ் குண்டுராவை வழிமறித்த விஷயம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வர தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டது. இதனிடையே, அலுவலகத்தின் வெளியில் இருந்தவர்கள் தினேஷ் குண்டுராவை வெளியில் வர சொல்லி கோஷங்களை எழுப்பினர்.
மதியம் 12 மணிக்கு அவர் வெளியில் வந்தார். உடனே அவரை சூழ்ந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் சோனியா மேடத்திடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அறிக்கை கொடுப்பது மட்டும் தான் வேலை என கூறினார். அதற்கு அதிருப்தியாளர்கள் ராகுல்காந்தியை சந்திக்க நேரம் பெற்றுத்தரும்படி கேட்டனர். அதற்கு பதில் கூறாமல் அவர் காரில் ஏறினார். இதனால் கூடியிருந்த அதிருப்தியாளர்கள் ஆத்திரத்தில் காரை வழிமறித்து போக விடாமல் தடுத்தனர். கார் கண்ணாடியை கையால் தட்டியும், காரின் முன்பகுதியில் கையால் குத்தியும் காரை செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் கார் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர். இதனையடுத்து கார் அங்கிருந்து சென்றது. அப்போது அதிருப்தியாளர்கள் காரின் மீது மண்ணை தூவினர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் பரபரப்பும் பதற்றமுமாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்