சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்! வெற்றி பெறுமா ? அன்புமணியின் திட்டம்!
PMK Protest: "பாமக சார்பில் இன்று சென்னையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது"

பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பாமக சார்பில் பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாமக நடத்த உள்ள, இந்த போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக பார்க்கப்படுகிறது. இப்போராட்டத்தில் தமிழ்நாட்டுச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கலந்து கொள்ளும் என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணியின் அறிக்கை
முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பல மாநிலங்கள் சமூகநீதியை பாதுகாப்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து வருகிறது. சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சமூகநீதியை சிதைத்து, படுகொலை செய்யும் முயற்சிகளில் மு.க.ஸ்டாலின் அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை நடப்பு பத்தாண்டின் முதல் பாதி சமூகநீதிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்று வர்ணிக்கும் வகையில் பல மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் பிகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல், தொழில் தொடங்க கடன் வழங்குதல், வீடு கட்டித் தருதல் உள்ளிட்ட நிகர்நோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதே காலத்தில் தான் ஒதிஷா மாநில அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கடந்த 2015 ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய மாநிலமான கர்நாடகம், இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்திருக்கிறது. அதுகுறித்த அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆந்திரத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இவை அனைத்துக்கும் மேலாக மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் நிலைமை?
உண்மையில், இந்தியாவின் முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் தான் நடத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், தென்னிந்தியாவின் இரு மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, மூன்றாவது மாநிலத்தில் விரைவில் முடிக்கப்படவுள்ள நிலையில். தமிழ்நாடு மட்டும் மறந்தும் கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட, தமிழ்நாட்டிற்கு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் எந்த நேரத்திலும் விசாரணைக்கு வரக்கூடும் என்பதால், 50%க்கும் கூடுதலாக இடஓதுக்கீடு வழங்கப்படுவதை நியாயப்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். அதுமட்டுமின்றி, கடந்த நூற்றாண்டிலிருந்தே சமூகநீதியில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழும் தமிழ்நாடு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதிலும் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
மத்திய அரசு நடத்துவது சென்சஸ் எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், மக்களும் வலியுறுத்துவது சாதிவாரி மக்கள்தொகை சர்வே ஆகும். ஆனால், இதை நடத்துவதற்கு கூட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பொய் கூறி, தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்ற முயல்வதை ஏற்க முடியாது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவைகளை திமுக அரசு உணரவில்லை என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். மாறாக, தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி கிடைத்து விடக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன்படி தமிழ்ச் சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் தான், சமூகநீதியில் விருப்பம் இல்லாத திமுக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மறுத்து வருகிறது. இது தான் உண்மை.
1989 ஆம் ஆண்டில் தொடங்கி, 2021 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு 3 வாய்ப்புகள் ஏற்பட்டன. அந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், அந்த 3 வாய்ப்புகளையும் சிதைத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கவிடாமல் செய்தது திமுக அரசு. 36 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகநீதிக்கு எதிராக திமுக எவ்வாறு சதி செய்து வருகிறது என்பதற்கு இவற்றை விட மோசமான எடுத்துக்காட்டுகள் எதுவும் இருக்க முடியாது என அறிக்கை வெளியிட்டிருந்தார்.





















