2024-இல் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் - காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு நம்பிக்கை!
மத்திய அரசு நினைத்தால் கலால் வரியைக் குறைத்து பெட்ரோல் டீசல் 45 ரூபாய்க்கு கொடுக்க முடியும். ஆனால் அதை செய்ய மறுக்கிறது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 75 ஆவது சுதந்திர வைர விழாவையொட்டி, தமிழகத்தில் 1930 ஆம் ஆண்டு ராஜாஜி, காமராஜர் முன்னெடுப்பில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நினைவுகூறும் வகையில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை பாத யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கி வைக்கிறார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அன்று தொடங்கிய போராட்டத்தை, எல்லா துறைகளிலும் மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசை எதிர்த்து இன்றைக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் இதுவரை மக்களிடமிருந்து 26 லட்சம் கோடியினை மத்திய அரசு வரிப்பணமாக பெற்றுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 145 டாலராக இருந்தது. இந்த ஆட்சியில் அது 40 டாலருக்கு கீழே குறைந்தபோதும், தற்போது 90 டாலராக உள்ள போதும் விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. மத்திய அரசு நினைத்தால் கலால் வரியைக் குறைத்து பெட்ரோல் டீசல் 45 ரூபாய்க்கு கொடுக்க முடியும். ஆனால் அதை செய்ய மறுக்கிறது.
அரசியல் கட்சி வெற்றி அடையவதும், தோல்வியடைவதும் சகஜம். 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்ற போது 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பின்னர் 10 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 16 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இப்போது பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது தற்காலிகமானது தான். காங்கிரஸ் கட்சி மீண்டும் 2024 ல் ஆட்சிக்கு வரும். மக்களவைத் தேர்தல், மாநில தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதில் காங்கிரஸ் கட்சியே மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பாஜக ஒருபோதும் முதன்மை பெற முடியாது. மூன்றாவது இடத்திற்கு வரமுடியாது. தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் நடைபெற்றுள்ள சாதனைகள் அளப்பரியது. தமிழகத்துக்கு வழங்கவேண்டி 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தரமாட்டோம். உடனடியாக சொத்து வரியை உயர்த்துங்கள் என்று மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரியை குறைக்கவேண்டும் என காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.