Ponmudi: மீண்டு(ம்) பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி - ஸ்டாலினின் முடிவு என்ன .?
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, கட்சியிலும், அரசிலும் பதவிகளை இழந்த பொன்முடி, மு.க. ஸ்டாலினை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் அவர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சிப் பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்து நிற்கும் பொன்முடியின் கிராஃப் மீண்டும் உயர ஆரம்பித்துள்ளதாகவும், அவருக்கு மீண்டும் ஒரு பதவியை கொடுக்க ஸ்டாலின் இறங்கி வந்துள்ளதாகவும் சொல்கின்றனர். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
பொன்முடிக்கு மீண்டும் கட்சிப் பதவி
திமுகவில் முக்கிய புள்ளியாக வலம் வந்த பொன்முடி, தனது சர்ச்சையான கருத்துகளாலேயே சரிவை சந்தித்தார். அதோடு சேர்த்து, விழுப்புரத்தில் முடிசூடா மன்னனாக இருந்த அவரது செல்வாக்கும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் வளர ஆரம்பித்தார். விழுப்புரம் கட்சி நிகழ்ச்சி பேனர்களில் கூட பொன்முடியும் புகைப்படம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், என்னதான் விழுப்புரத்தில் லட்சுமணன் கொடிகட்டிப் பறந்தாலும், திமுக தலைமையிடம் பொன்முடியை தாண்டி அவரால் எதையும் சாதிக்க முடியாமல் திணறுகிறாராம்.
துணை பொதுச்செயலாளர், அமைச்சர் என அனைத்து பதவிகளையும் இழந்ததால் தான் விழுப்புரத்தில் பொன்முடியின் செல்வாக்கு குறைவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பி வந்தனர். ஆனால் பதவிகளை இழந்தாலும், பொன்முடி கட்சி தொடர்பாக அவதூறான கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகளையும் தவிர்க்காமல் கலந்து கொண்டார். இனி இப்படி எதுவும் சர்ச்சையாக பேச மாட்டேன் என ஸ்டாலினிடம் அவர் உறுதி கொடுத்து சமரசமாக போய்விட்டதாகவும் பேச்சு இருக்கிறது.
தலைமையிடம் உயர்ந்த செல்வாக்கு
ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பொன்முடியும் அவருடன் வந்திருந்தார். இப்படி திமுக தலைமையிடம் பொன்முடியின் கிராஃப் மீண்டும் உயர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், விழுப்புரத்தின் அடையாளமாக, கட்சியின் உயர் பதவிகளில் பொன்முடி இருக்க வேண்டும் என்று திமுகவினர் விரும்புகின்றனர். அந்த இடத்தை பிடித்து அமைச்சரவையில் நுழைய லட்சுமணன் முயற்சி செய்தாலும், பொன்முடியின் அனுபவத்தையும், கட்சித் தலைமையுடனான நெருக்கத்தையும் தாண்டி, அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற பேச்சு இருக்கிறது. விழுப்புரத்தில் லட்சுமணன் கைகள் ஓங்கினாலும், பொன்முடி விவகாரத்தில் அவர் மீது தலைமையிடம் புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிகிறது.
ஸ்டாலினின் முக்கிய முடிவு
இந்த நிலையில், பொன்முடியிடம் மீண்டும் தலைமைக் கழக பொறுப்பை ஒப்படைக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். துணை பொதுச்செயலாளர் பதவியின் எண்ணிக்கையை அதிகரித்து, மீண்டும் அவருடையே பதவியையே கொடுக்கலாமா அல்லது புதிதாக பதவி உருவாக்கி கொடுக்கலாமா என ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எப்படியோ, மறுபடியும் கட்சியில் பதவியை பிடிக்கப்போகும் பொன்முடி, மீண்டும் சர்சைகளில் சிக்காமல், வாயை கட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே, திமுக தொண்டர்கள், குறிப்பாக பொன்முடியின் ஆதரவாளர்களின் வேண்டுதலாக உள்ளது.





















