Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி, பல்வேறு சர்ச்சையான கருத்திற்கு சொந்தகாரராக இருந்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து, குறிப்பிட்ட சாதி குறித்து பேசியது என இவரது பல பேச்சுக்கள் பேசு பொருளானது. இதனையடுத்து பொன்முடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால் கட்சியில் இருந்து தாம் ஓரங்கட்டுப்படுவதாக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து வந்த பொன்முடி, கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. எனவே தேர்தலை எதிர்கொள்ள மூத்த நிர்வாகிகளின் பங்களிப்பு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் பொன்முடியின் அதிருப்தியை குறைக்கும் வகையிலும், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி பணியை துரிதப்படுத்தும் வகையிலும் பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே முதலமைச்சரின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி சர்ச்சையாக பேசிவந்த வந்த பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு விட்டதால் இது எந்த கவலையும் இல்லாமல் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவாரா.? அல்லது திருந்தி இருப்பாரா.? என்பதை மக்களின் கேள்வியாக உள்ளது.
இதனிடையே மொற்றொரு துணை பொதுசெயலாளரும் திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் பாஜக பலம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் அதனை ஈடு கட்ட கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திமுக வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் துணை பொதுச்செயலாளர், புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முனைவர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தி.மு.க. துணைப் பொதுசெயலாளர்களாக நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மற்றொரு அறிவிப்பில், திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் அவர்கள் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக இல.பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக, கே.ஈஸ்வரசாமி, எம்.பி., திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டப் பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு ஆகிய இரண்டு மாவட்டக் கழகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வேலூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.பி.நந்தகுமார், எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் வடக்கு பொறுப்பாளராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த், எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காட்பாடி கீழ்வைத்தியணான்குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





















