14 ஆண்டுகளுக்கு பிறகு திருமாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? ஸ்டாலினின் பக்கா ஸ்கெட்ச்
அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பதால் கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் வெற்றி பெறுவது திமுகவுக்கு கடினமாகி இருக்கிறது. எனவே, கொங்கு மண்டலத்தில் ஏற்படும் இழப்பை வட தமிழகத்தில் சரி செய்ய திமுக கூட்டணியில் பாமகவை கொண்டு வர ஸ்டாலின் காய்களை நகர்த்தி வருகிறார்.

14 ஆண்டுகளுக்கு பிறகு திருமாவளவனுடன் ராமதாஸ் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வட தமிழகத்தில் பரம எதிரிகளாக கருதப்படும் விசிகவையும் பாமகவையும் ஒரே கூட்டணியில் இணைக்க ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வந்ததாகவும் தற்போது அது கைகூடி வந்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இணைந்திருப்பதால் கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் வெற்றி பெறுவது திமுகவுக்கு கடினமாகி இருக்கிறது. எனவே, கொங்கு மண்டலத்தில் ஏற்படும் இழப்பை வட தமிழகத்தில் சரி செய்ய இந்த மெகா கூட்டணி உதவும் என திமுக நம்புகிறது.
பாஜக எதிர்ப்பில் ஒன்று சேரும் திருமாவளவன், ராமதாஸ்:
இன்னும் 12 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி பழனிச்சாமி, தனது நிலைபாட்டை மாற்றி கொண்டு கடந்த 11ஆம் தேதி, பாஜக கூட்டணியில் இணைந்தார்.
கடந்த 2019 மக்களவை தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக 2024 மக்களவை தேர்தலில் தனியாக கூட்டணி அமைத்து களம் கண்டது. 3 தேர்தல்களாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதிமுக, வரும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
கொங்கு மண்டலம் ஏற்கனவே அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. அங்கு, பாஜகவும் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை கொண்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் கோயம்புத்தூரில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இதனை வரும் தேர்தலில் மாற்றி காட்ட திமுக முனைப்பு காட்டி வந்தது. இதற்காக, செந்தில் பாலாஜி மூலம் கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
உருவாகிறது மெகா கூட்டணி?
இந்த சூழலில்தான், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை தூக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியது. எனவே, தனது அமைச்சர் பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக - பாஜக இணைந்திருப்பது, அமைச்சர் பதவியில் இல்லாத செந்தில் பாலாஜி என அடுத்தடுத்து திமுக நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
எனவே, வரும் தேர்தலில் கொங்கு பகுதியில் ஏற்படும் இழப்பை வட தமிழகத்தில் சரி செய்ய திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, வட தமிழகத்தில் தன்னுடைய கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்து வந்தார். பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை தன்பக்கம் இழுக்க அமைச்சர் துரைமுருகன் மூலம் காய்களை நகர்த்தினார் ஸ்டாலின்.
அந்த முயற்சி விரைவில் கைகூட உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும், திமுக கூட்டணியில் உள்ள விசிகவும் பாமகவும் பரம எதிரிகளாக கருதப்பட்டு வருகின்றனர். இருப்பினும், பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் திருமாவளவனையும் ராமதாஸையும் இணைக்க ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டார். தற்போது, அதற்கு பலன் கிடைத்துவிட்டது.
கிரீன் சிக்னல் கொடுத்த திருமா:
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கு திருமாவளவன் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, 14 ஆண்டுகளுக்கு பிறகு திருமாவளவனுடன் ராமதாஸ் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடைசியாக, கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் விசிகவும் பாமகவும் இணைந்து போட்டியிட்டது.
அதன் பிறகு, இந்த இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைந்து போட்டியிட்டதே இல்லை. குறிப்பாக, திவ்யா - இளவரசன் விவகாரத்திற்கு பிறகு, இந்த இரண்டு கட்சிகளும் கடுமையாக சாடி கொண்டன. பாஜக மட்டும் இல்லை, பாமக இடம்பெறும் கூட்டணியிலும் எக்காரணத்திற்காகவும் இடம்பெற மாட்டோம் என விசிக அறிவித்தது.
இதை எல்லாம் பின்னுக்கு தள்ளி பாமக உடனான கூட்டணிக்கு தயாராகி வருகிறது விசிக. இதற்கான சமிக்ஞைகள் இரு தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வன்னியர் சங்க மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர். அதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி, ராமதாஸை பாராட்டி விசிக எம்.பி. ரவிகுமார் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். எனவே, கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு தொண்டர்கள் மத்தியில் இருக்கும் கசப்புணர்வை நீக்கி நல்லுறவை பேணுவதற்கான முயற்சியில் விசிகவும் பாமகவும் இறங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

