PM Narendra Modi : `வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது!’ - ஆளுங்கட்சியை விமர்சித்து பிரதமர் மோடி உரை..
`வாரிசு அரசியல் என்பது வெறும் அரசியல் பிரச்னை மட்டுமல்ல. அது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய எதிரியாகும்’ என்று பிரதமர் மோடி இன்று ஹைதராபாத்தில் பேசிய போது கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள பிரதமர் மோடி வாரிசு அரசியலை விமர்சனம் செய்துள்ளார். மேலும், தெலங்கானா மாநிலத்தைத் தொழில்நுட்பத்தின் தலைநகராக மாற்ற பாஜக விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். `ஒரு கட்சியில் வாரிசு அரசியல் என்பது வெறும் அரசியல் பிரச்னை மட்டுமல்ல. அது ஜனநாயகத்திற்கும், நம் நாட்டின் இளைஞர்களுக்கும் மிகப் பெரிய எதிரியாகும். ஒரு குடும்பத்திற்காகவே இருக்கும் அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் இருப்பதை நம் நாடு கண்டிருக்கிறது’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பீகாரில் லாலு பிரசாத் கட்சி ஆகியவற்றை விமர்சிக்கும் போது பிரதமர் மோடி கடந்த காலங்களில் பல முறை வாரிசு அரசியலைச் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தெலங்கானா ராஷ்ட்ரா சமிதி ஆட்சியில் உள்ள தெலங்கானாவில் வாரிசு அரசியலைக் கண்டித்து பிரதமர் மோடி முதல் முறையாக பேசியுள்ளார். `வாரிசு அரசியல் கட்சிகள் தங்கள் வளர்ச்சி மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இவற்றிற்கு ஏழைகள் மீது அக்கறை இல்லை. ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரம் பெறுவதையும், தங்களால் முடிந்தவரை மக்கள் பணத்தைத் திருடுவதையும் மட்டுமே இவர்களின் அரசியல் கவனம் செலுத்தும். இவர்கள் மக்களை முன்னேற்றுவதில் எந்த அக்கறையும் காட்ட மாட்டார்கள்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, `தெலங்கானா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் என்பதும், பாஜக ஆட்சிக்கு வருவதும் உறுதி. சமீபத்திய தேர்தல்கள் அதனை உணர்த்துகின்றன. தெலங்கானா மாநிலத்தை மேலும் உயரமாக எடுத்துச் செல்வதே எங்கள் இலக்கு. ஒரு குடும்ப ஆட்சிக்காக தெலங்கானா இயக்கத்தில் மக்கள் தியாகம் செய்யவில்லை. வாரிசு அரசியல்வாதிகளுக்கு ஏழைகளைப் பற்றி கவலை இல்லை. ஒரு குடும்பம் ஆட்சியில் இருந்தால் எவ்வளவு ஊழல்மயமாகு என்பதைத் தெலங்கானா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஹைதராபாத்திற்கு வரும் முன்பு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவகவுடாவைச் சந்திக்க பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
கடந்த 4 மாதங்களில் பிரதமர் மோடி தெலங்கானாவுக்கு வந்து, அவரைச் சந்திக்காமல் முதல்வர் சந்திரசேகர ராவ் சென்றிருப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த பிப்ரவரி மாதம், பிரதமர் மோடி ராமானுஜம் சிலை திறப்பிற்கு வந்த போது உடல்நிலையைச் சுட்டிக்காட்டி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தன்னுடைய உரையில் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.