Caste Census: எடுபடாத ராமர் கோயில், உ.பி., கொடுத்த தோல்வி, சாதி வாரி கணக்கெடுப்பில் குதித்த மோடி - தேர்தல் கணக்கு
Caste Census Politics: ராகுல் காந்தியின் நீண்ட நாள் கோரிக்கையான சாதி வாரி கணக்கெடுப்பிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்தற்கான காரணங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Caste Census Politics: பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியாகியுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராகுலின் கோரிக்கையும் - மத்திய அமைச்சரவை ஒப்புதலும்:
நாட்டில் பெரும்பான்மை மக்களாக உள்ள ஒபிசியினருக்கு, அரசு நிர்வாகத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறார். இதன் காரணமாக சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், இதனை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு,திடீரென சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான அமைச்சரவை ஒப்புதலை வழங்கியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு வரலாறு:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1931ம் ஆண்டு வரை மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதி வாரி கணக்கெடுப்பு என்பது வழக்கமானதாக இருந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டது. பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்பட்டது. கடந்த 1961ம் ஆண்டு முதல் மாநில அரசுகளே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவும், தேவைப்பட்டால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவரங்களை தொகுக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாதி வாரி கணக்கெடுப்பு முக்கியமானது ஏன்?
சாதி சார்ந்த தரவுகள் மட்டுமின்றி, ஆழமான சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை சாதி வாரி கணக்கெடுப்பு நிகழ்த்தும். இந்த தரவுகள் உறுதியான செயல் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்யவும் , பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தவும், வேரூன்றிய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யவும் உதவும். இந்தியாவில் அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறது. இவை சாதி, பிராந்தியம், மதம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளால் வடிவமைக்கப்படுகிறது. இதில் உள்ள பிரச்னைகளை கண்டறியவும், அனைவரையும் உள்ளடக்கிய சமமான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வடிவமைக்கவும் சாதி வாரி கணக்கெடுப்பு ஆதரவளிக்கிறது.
இப்போது கணக்கெடுப்பு ஏன்?
பெரும்பாலானோருக்கு இப்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன்? என்பதே கேள்வியாக உள்ளது. அரசியல் ரீதியாக நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலே பிரதான காரணமாக கருதப்படுகிறது. சி வோட்டர்ஸின் லேட்டஸ்ட் சர்வேயில் பீகார் முதலைமைச்சர் வேட்பாளர் என்ற கணக்கெடுப்பில், தேஜஸ்வி முதல் இடத்திலும் அதாவது கிட்டத்தட்ட 40 சதவீதமும், இரண்டாவது இடத்தில் பிரஷாந்த் கிஷோரும் (18%), நிதிஷ்குமார் (15%) மற்றும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் (10%) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். பீகாரில் ஆட்சியை பிடிப்பதில் ஓபிசி தலைவர்கள் முன்னணியில் இருக்கும் சூழலில் தான், சாதி வாரிக் கணக்கெடுப்பு எனும் ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
எடுபடாத ராமர் கோயில்
அயோத்தி ராமல் கோயில் தேர்தலில் தங்களுக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும் என பாஜக கருதியது. ஆனால், மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 43 இடங்களை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மைனாரிட்டி அரசு அமைத்ததற்கு, அவர்கள் பெரிதும் எதிர்பார்த்த உத்தரபிரதேச மாநிலத்தில் தோல்வியுற்றது முக்கிய காரணமாகும். இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றால், அது வரும் 2027ம் ஆண்டில் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜக நம்புகிறது. இதன் காரணமாகவே எந்தவொரு சூழலிலும் பீகாரில் தோல்வி காண கூடாது என பாஜக, சாதி வாரி கணக்கெடுப்பை முன்னெடுத்துள்ளது.
அடுத்து என்ன செய்யும் பாஜக அரசு?
இந்திய அரசாங்கம் குடிமக்களை சமூக மற்றும் கல்வி அளவுகோல்களின் அடிப்படையில் பழங்குடியினர் (ST), பட்டியல் சாதியினர் (SC), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மற்றும் பொதுப் பிரிவினர் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடத்தப்படும் சாதி வாரி கணக்கெடுப்பின் மூலம், மக்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் அரசு நிர்வாகத்தில் பல்வேறு சாதியினரின் பிரதிநிதித்துவத்தை அரசால் அறிய முடியும். குறிப்பாக பொது வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களை அணுகுதல் போன்ற துறைகளில். அரசாங்க முயற்சிகளால் எந்த சமூகங்கள் பயனடைந்துள்ளன, எந்த சமூகங்கள் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளன என்பதை அடையாளம் காண முடியும். அதனடிப்படையில் எதிகாலத்திற்கான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என அரசு தீர்மானிக்கும்.
தோல்வி பயம்:
அதன்படி, ஓபிசி சமூகத்தினர் நிறைந்து பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற முக்கிய மாநிலங்களில், அவர்களை மையப்படுத்திய பல தேர்தல் அறிக்கைகள் மற்றும் திட்டங்களை அள்ளி வீசும் நோக்கிலேயே மத்திய அரசு தற்போது சாதி வாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மட்டும் 120 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒருவேளை அங்கு ஆட்சியை இழந்தால், அடுத்த மக்களவை தேர்தலில் பாஜகவின் பாடு திண்டாட்டமாகிவிடும். இதன் காரணமாகவே பாஜக ராமர் கோயிலை விடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் மீண்டும் ஓபிசி அரசியலை கையில் எடுத்துள்ளது.





















