ஒற்றை தலைமை: ஒபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவு போஸ்டர்களால் நெல்லையில் பரபரப்பு
அதிமுகவிற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல், ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தற்போது வெளி வர துவங்கி உள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து நேற்று முன் தினம் கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஒற்றை தலைமை தேவை என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக அதிமுகவிற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல், ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தற்போது வெளி வர துவங்கி உள்ளது. இந்த பிரச்சனை விசுவரூபம் எடுத்து வரும் நிலையில் சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமைக்கு பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கோடிட்டு காட்டினார்.
இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமையை வலியுறுத்தி தொண்டர்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டிக் கொள்வதாக ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நெல்லை மாநகர் பகுதிகளில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் பாலம், உள்ளிட்ட பல இடங்களில் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் நிகழ்கால பரதனே, ஒற்றை தலைமை ஏற்க வா என்ற வாசகத்துடன் அச்சிடப்பட்டு உள்ளது. குறிப்பாக ராமாயண இதிகாசத்தில் இராமர் - சீதை 14 ஆண்டுகள் வனவாசம் புரிகையில், அயோத்தி நகரத்தை இராமரின் பாதுகைகளை வைத்து வழிப்பட்டு, துறவிக் கோலத்தில் கோசல நாட்டை ஆட்சி செய்த பரதனின் பெயரை மேற்கோள் காட்டி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ”நிகழ்கால பரதனே” என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது ஒரு புறம் இருக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசியல் வாரிசு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அணி வகுப்போம் என போஸ்டர்கள் சமூக வலைத் தலங்களில் பரப்பப்பட்டு வருகிறது. நெல்லையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் க்கு ஆதரவாக இரு தரப்பினரும் தங்களது கருத்துகளை பரப்பி வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது