பழனி பஞ்சாமிர்தம் விவகாரம் - பாஜகவினர் மீது அமைச்சர் சேகர் பாபு எடுத்த நடவடிக்கை
பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பிய பாஜகவை சேர்ந்த செல்வகுமார் , வினோத் பி செல்வம் மீது இந்து அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சேகர்பாபு.
புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மீக பயணம்
சென்னை திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, திருக்கோயில் பிரசாதங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், திருமதி கி.ரேணுகாதேவி, திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சி.நித்யா மற்றும் அலுவலர்கள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை, மானசரோவர் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மானியம் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் இராமேசுவரம் காசி, அறுபடை வீடுகள் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக் கோயில்களும் ஆன்மிகப் பயணத்தினை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், கடந்த ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் நான்கு கட்டங்களாக அம்மன் திருச்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
குறிப்பாக புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தை இன்று திருவல்லிக்கணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தில் 40 பக்தர்கள் பங்கேற்றனர். இக்குழுவினருக்கு திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர், அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், திருவிடந்தை, அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில். திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம் மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் ;
தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா ஆன்மீக பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இன்று மட்டும் 270 நபர்கள் ஆன்மிக பயணத்தை மேற்கொள்ள உள்ளார்கள்.
திமுக ஆட்சி வந்தவுடன் தமிழக முதல்வர் உத்தரவு 2021 ஆம் ஆண்டு அன்றைய ஆணையரின் சுற்றறிக்கையில் திருக்கோயில்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற நெய்களை ஆவின் நிர்வாகத்தில் தான் வாங்க வேண்டும் என்று ஆணையருடைய சுற்றறிக்கை தமிழக முதல்வர் திறவின் பேரில் அனைத்து திருக்கோவில்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் - பாஜகவினர் மீது புகார்
நேற்றைய பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக பொய்யான செய்தி வெளியிட்ட பாஜகவை சேர்ந்த செல்வகுமார் மற்றும் வினோத் பி.செல்வம் மீது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை பொறுத்தவரை இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு வேளை அன்னதானம் நாள் முழுவதும் 750 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 516 திருக்கோவில்களுக்கு ஒன்றிய அரசின் போக் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இயக்கப்பட்டு வரும் கோயில்களுக்கு தான் மத்திய அரசு போக் சான்றிதழ் அதிகமாக வழங்கியுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற திட்டம் என்பது 2 ஆயிரம் ஆண்டு கனவு அதைத்தான் பல்வேறு சிக்கலுக்கு பின் இந்த திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். பணி நியமன ஆணை வழங்கும் முன்பு தடை வாங்க நீதிமன்றம் சென்ற ஒரு கூட்டம் இன்றும் அதை தடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட நபர்களை 3 மாதத்திற்கு ஒரு முறை தொடர்பு கொண்டு அவர்களுக்கு இருக்கும் சிக்கலை கண்டறிந்து தீர்க்கும் பணியை துறை சார்பில் பேசி வருகிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என்கின்ற திட்டத்தின் கீழ் 26 அர்ச்சகர்கள் அனைத்து திருக்கோயிலும் முழு சுதந்திரத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
எச்.ராஜா குற்றச்சாட்டு சொல்லவில்லை என்றால் ஆச்சரியம்
பாஜகவை சேர்ந்த எச். ராஜா பொருத்தவரையில் அவர் குற்றச்சாட்டுகளை சொல்லவில்லை என்றால் தான் ஆச்சரியம். ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என்கின்ற நிலையிலிருந்த அச்சகர்கள் இன்று கை நிறைய வருமானம் வாங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரக்கூடிய பொய்யான கருத்துக்களை குறித்து இந்து சமய அறநிலைத்துறை என்றும் அஞ்சாது. மிகவும் தரமான அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதன் காரணத்தால் தான் அனைத்து உலக முருகன் மாநாடு உலக அளவில் பலரும் அறிந்து கொள்ள கூடிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. மஞ்சள் காமாலை வந்தவன் பார்ப்பதெல்லாம் மஞ்சள் போல் தெரியும் என்பதை போன்று அவர் இந்த ஆட்சியை கூற வேண்டும் என்று மட்டுமே இதுபோன்று பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.