‘விவசாயத்தை அழித்து புதிய வழித்தடம் வேண்டாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு’ - அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மேட்டூர்-சேலம் உபரிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி 2400 ஏக்கர் பரப்பளவில் உள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஏரியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டார். கனமழை காலத்திலும் நீர் வரத்து இன்று முள்காடாக வறண்ட நிலையில் காணப்படும் பனமரத்துப்பட்டி ஏரியை பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ் பனமரத்துப்பட்டி ஏரிக்கு நீர்வரும் தடங்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 2400 ஏக்கர் பரப்பளவிலான பனமரத்துப்பட்டி ஏரியை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “கனமழையால் கிடைத்த நீர்வரத்தை பயன்படுத்த முடியாமல் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 240 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள நதிகள், ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்ப வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டாலும் அது இன்னும் முழுமையடையாமல் தான் உள்ளது. தமிழக அரசு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மேட்டூர்-சேலம் உபரிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியில் மேட்டூர் அணை உபரிநீரை நிரப்புவதன் மூலம் ஒரு டி.எம்சி தண்ணீரை சேமிக்க முடியும். இதன் மூலம் சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான குடிநீரை வழங்கிட முடியும். தற்போது பனமரத்துப்பட்டி ஏரி மிக மோசமான நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியின் நீர்வழித் தடங்கள், வரத்து கால்வாய்கள் தூர்ந்து போய்விட்டதால் மழையால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே மேட்டூர் அணை நீரைக் கொண்டு நிரப்புவதே சரியான தீர்வாக இருக்க முடியும்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு ஏரிகள் குளங்கள் மழை நீரை சேமிக்க முடியாமல் வறண்டு கிடக்கின்றன. புதியதாக நீர் நிலைகளை உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை. இருக்கும் நீர்நிலைகளையாவது காப்பாற்ற வேண்டும். காவிரி நீர்வழித்தடத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை கட்டியிருந்தால் கடலில் வீணாக கலந்த நீரை முறையாக சேமித்து இருக்கலாம். இதேபோல காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களை வளப்படுத்தி இருக்கலாம். இதேபோன்று தாமிரபரணி-நம்பியாறு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு இது போன்ற நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். பருவநிலை மாறுபாடு, காலநிலை மாற்றத்தால் மிக மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
எட்டுவழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை சேலம்-சென்னை இடையே ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கும் போது நான்காவதாக விவசாயத்தை அழித்து புதிய வழித்தடம் வேண்டாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. எட்டுவழிச்சாலை திட்டத்தில் திமுக தன்னுடைய நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி கொள்கிறது. எங்களைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் பிரச்னை, விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் தேவையில்லை. எந்த திட்டமாக இருந்தாலும் விவசாயிகளை பாதிக்காமல் திட்டங்களை கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.