Sri Nainar Balaji : 'கட்சியில் பதவி, கல் குவாரி’ நயினார் மகன் பாலாஜிக்கு வலுக்கும் எதிர்ப்பு..!
'பொறுப்பு கிடைத்தவுடன் கட்சி நடவடிக்கை, செயல்பாடுகளில் பாலாஜி தலையிடுகிறார் என்று நயினார் நாகேந்திரனிடம் சொன்னால், சொன்னவரை கடிந்துகொள்கிறாராம், பாலாஜி சொல்வதை கேட்கச் சொல்கிறாராம்’

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு அமைப்பு சார்ந்த புதிய பதவிகளை பல்வேறு நபர்களுக்கு வழங்கி வருகிறார். அதில், தன்னுடைய மகன் பாலாஜிக்கும் புதிய பொறுப்பு வழங்கியதுதான் இப்போது சர்ச்சையாக கட்சியில் வெடித்திருக்கிறது.
நயினாரை அதிமுக-காரராக பார்க்கும் பாஜகவினர்
அதிமுகவுடன் கூட்டணியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்காக பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்னாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரை பாஜகவினர் ஒரு அதிமுக-காரராகதான் இப்போது வரை பார்த்து வருகிறார்களே தவிர, பாஜக தலைவராக இன்னும் பார்க்கத் தொடங்கவில்லை. அதே நேரத்தில், டிடிவி தினகரன், ஒபிஎஸ், சசிகலா உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக்கி தேர்தலை சந்திப்பார் என்று பாஜக தலைமை எதிர்பார்த்த நிலையில், அதற்கு நேர்மாறாக நயினார் நாகேந்திரன் நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. குறிப்பாக, டிடிவி தினகரன் வெளிப்படையாகவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், ஒபிஎஸ்-ம் கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரன் – தான் காரணம் என பட்டவர்த்தனமாக கூறியுள்ள நிலையில், நயினாரின் செயல்பாடுகள் தொடக்கத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில், கட்சி தலைவர் பொறுப்பு கிடைத்தவுடன் பல்வேறு புதிய பொறுப்புளுக்கு நிர்வாகிகளை நியமித்தார் நயினார். அதில், குஷ்பு உள்ளிட்டோருக்கு துணைத் தலைவர் பதவி கிடைத்தது. ஆனால், கட்சியில் தொடர்ந்து பணியாற்றிய அலிஷா அப்துல்லாவிற்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. இதனை குறிப்பிட்டு, தான் ஒரு இசுலாமிய பெண் என்பதற்காக பொறுப்பு கொடுக்கப்படவில்லையா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்த சூடு அணைவதற்குள் அடுத்த ஒரு நெருப்பு பற்றிக் கொண்டது.
தன் மகனுக்கு உடனே பதவி கொடுத்த நயினார்
அது நயினார் நாகேந்திரன் தன்னுடைய மகனுக்கு கொடுத்த புதிய பதவிதான். விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பாளராக பாலாஜிக்கு பொறுப்பை போட்டு அறிவிப்பு வெளியிட்டார் நாகேந்திரன். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவை வாரிசு அரசியல் கட்சி என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தன்னுடைய மகனுக்கு தானே கட்சியில் பதவி வழங்கியதை பாஜகவினர் ரசிக்கவில்லை. இது கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கட்சி விவகாரங்களில் தலையிடும் பாலாஜி ?
அதோடு, கட்சியின் பல்வேறு நிர்வாக முடிவுகள், செயல்பாடுகளில் பாலாஜி தலையிட தொடங்கியதாக புகார் வாசிக்கிறார்கள் பரம்பரை பாஜக காரார்கள். இது குறித்து நயினாரிடம் சொல்லியும், அவர் அதனை கண்டுகொள்ளாமல், பாலாஜி குறித்து பேசியவரை கடிந்துக்கொண்டு, ‘தம்பி சொல்றத’ கேளுங்க என்ற தொனியில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
I had joined @BJP4TamilNadu @BJP4India only for @PMOIndia and @annamalai_k because their vision is very clear, No religion ! No caste ! Just pure hardwork, being a renowned sports personality of India, this is very dishearting to see this I have worked 3 yrs really hard for this… pic.twitter.com/Dfb72Sn89c
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) September 4, 2025
கல் குவாரி அமைக்கும் பாலாஜி – எதிர்க்கு தெரிவிக்கும் மக்கள்
இந்நிலையில், தன்னுடைய தந்தை பாஜக மாநில தலைவராக ஆகிவிட்ட நிலையில், தங்களுடைய தொழிலையும் விரிவுப்படுத்த முடிவு எடுத்துள்ளார் பாலாஜி. அதற்காக, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஸ்ரீமூலக்கரை பகுதியில் புதியாக கல் குவாரி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நயினார் பாலாஜி. அதற்காக அரசின் அனுமதி கேட்டு விண்ணப்பித்த நிலையில், அதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.
வருவாய் கோட்டாட்சியர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நயினார் பாலாஜி ஏற்படுத்தப்போகும் கல் குவாரிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கிராம மக்களும் பேசும்போது, கல்குவாரி அமைக்கும் பகுதிக்கு அருகே சிவகளை தொல்லியல் ஆய்வு களம் இருக்கிறது என்றும் வண்டி பாதை இருக்கிறது எனவும் கூறி இங்கு கல் குவாரி அமைப்பது ஏற்கத்தக்கதாக இருக்காது என வாதிட்டிள்ளனர். அதே நேரத்தில், நயினார் பாலாஜி புதிய கல் குவாரி அமைக்க விண்ணப்பித்த படிவத்தில் பல முக்கிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றும் எம்.எல்.ஏவாக இருப்பவரின் மகனுக்கு குவாரி அமைக்கும் அனுமதியை தரக் கூடாது என்றும் அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருக்கின்றனர். இதனால், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமல், உயர் அதிகாரிகளுக்கு இந்த கருத்துகள் அனுப்பி வைக்கப்படும், அவர்கள் முடிவெடுப்பார்கள் என கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
கட்சியில் பொறுப்பு வாங்கிய சில நாட்களிலேயே கல்குவாரி உள்ளிட்ட தன்னுடைய தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த முயன்றுள்ள நயினார் பாலாஜி, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கு ஏற்றார்போல் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.





















