தேசிய கீதம் அவமதிப்பு புகார்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கீதம் முடிவடையும் முன்பே எழுந்து சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரில் மும்பை நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் முடிவடையும் முன்பே எழுந்து சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரில் மும்பை நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்தப் புகாரை பாரதிய ஜனதா கட்சியின் மும்பை மாவட்டச் செயலாளர் அளித்துள்ளார்.
நீதிமன்றம் விடுத்துள்ள இந்த ஆணையில், புகாரின் முன்னணி ஆதாரங்களாக வீடியோ பதிவுகள் டிவிடியிலும், யூட்யூப் தளத்திலும் உள்ளதாகவும், அதில் குற்றம் சாட்டப்பட்டவரான மம்தா பானர்ஜி தேசிய கீதம் பாடத் தொடங்கியதாகவும், திடீரென அதனை நிறுத்திவிட்டு, மேடையில் இறங்கி கிளம்புவதும் பதிவாகியுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் பெருமை அவமதிப்பதைத் தடைசெய்யும் சட்டத்தின் கீழ் மம்தா பானர்ஜி குற்றம் புரிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பை பெருநகர் மேஜிஸ்திரேட் மோகாஷி தன்னுடைய ஆணையில், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் மேற்கு வங்கத்தின் முதல்வர் என்றும், அவர் தனது அலுவலக கடமைகளை செய்யும் இடத்தில் இந்த விவகாரம் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்தச் சிறப்பு அனுமதியும் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புகார் அளித்தவர் வீடியோ பதிவை ஆதாரமாக சமர்பித்திருப்பதே குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள போதுமானது எனவும் கூறியுள்ளார்.
Mamata Banerjee was sitting down at first then stood up and stopped singing halfway the national anthem of India.
— BJP Bengal (@BJP4Bengal) December 1, 2021
Today, as a Chief Minister, she has insulted the culture of Bengal, the national anthem and the country, and the Gurudev Rabindranath Tagore! pic.twitter.com/2pme2qCg23
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது புகார் அளித்துள்ள விவேகானந்த் குப்தாவும் வழக்கறிஞர் ஆவார். தேசிய கீதத்தை மம்தா பானர்ஜி அவமதித்ததாகக் கூறி மும்பை கஃப் பரேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 1 அன்று, மும்பை நாரிமான் பாயிண்ட் பகுதியில் உள்ள ஒய்.பி.சவன் ஆடிட்டோரியத்தில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தேசிய கீதத்தை அவமதித்ததாகத் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியின் முடிவின் போது, குற்றம் சாட்டப்பட்ட மம்தா பானர்ஜி அமர்ந்துகொண்டே தேசிய கீதம் பாடியதாகவும், பின்னர் எழுந்து இரண்டு வரிகளைப் பாடியதாகவும், பின்னர் திடீரென அதனைப் பாடாமல் நின்றதாகவும் இதன்மூலம் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.