MP Kanimozhi: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்கிறது - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டு கூட்டம் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
கருத்து கேட்பு மீட்பு:
குறிப்பாக உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் முன் வைக்க வேண்டிய கோரிக்கைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து வரும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 7 வது மாவட்டமாக சேலம் மாவட்டத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
இதில் சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர்.
தேர்தல் அறிக்கை குழு:
திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு தலைவருமான கனிமொழி எம்.பி தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர், அப்துல்லா, விவசாய அணி செயலாளர் விஜயன், சட்டமன்ற கொறடா செழியன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாணவரணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் எம் எல் ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் அனைத்து தரப்பு மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இந்த நிகழ்ச்சியில் 3 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து துரோகம்:
பின்னர் திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசியது, "தேர்தல் அறிக்கை குழுவை தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிக்கும் நேரில் சென்று, அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்களது கோரிக்கைகளை பெற்று வர பணித்து உள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் கருத்துகளை கேட்க வந்து உள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை முதலமைச்சருக்கு தெரிவித்து, தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வோம் என்று உறுதி அளித்தார்.
மத்திய அரசானது தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகத்தை செய்து வருகிறது, வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட நிதியை வழங்காமல் மறுப்பு தெரிவித்து வருகிறது, மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாத நிலையில் உள்ளது. மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் சிரமத்தை கொடுக்கும் ஜிஎஸ்டியில் உள்ள குழப்பத்தை நீக்கிட வேண்டுமென பலமுறை கேட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.
மனநிலை புரியாத அரசு:
இப்படி மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளாத, மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லாத அரசாக பாஜக அரசு உள்ளது என்றும், எனவே மக்களை ஒற்றுமையுடன் வைத்துக் கொள்ளும் இந்திய அரசை உருவாக்க வேண்டும். எனவே வரும் தேர்தலில் ஒற்றுமையை நிலை நாட்டும் அரசை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசை, வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் அரசாகவும், இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மொழி பேசும் மக்களையும் ஒன்றிணைக்கும் அரசை தேர்ந்து எடுக்கும், இந்த தேர்தலை நாம் சந்திக்க உள்ளதாகவும், இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.
இதற்கு முன்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ஓசூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சேலத்தில் மக்களை சந்தித்து வருகின்றனர்.