MDMK Political Issue: ’வைகோ மகன் துரை.வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு’ மதிமுகவை உடைக்க தயாராகும் 14 நிர்வாகிகள்..!
அதிருப்தியில் இருக்கும் இந்த 14 பேரும் தனி அணியாக ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், வாரிசு அரசியலை எதிர்த்து உதயமான மதிமுக, வாரிசு அரசியலாலேயே உடையும் நிலை ஏற்பட்டியிருக்கிறது.
திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு பொறுப்பு கொடுத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கிய வைகோ, இன்று தன்னுடைய கட்சியிலேயே தனது மகன் துரை வையாபுரிக்கு கட்சி பொறுப்பு கொடுத்திருப்பது மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை ; எனது மகன் கட்சியில் எந்த பொறுப்பிற்கும் வர மாட்டார் என முழங்கிக்கொண்டிருந்தவர் வைகோ. ஆனால், புத்திர பாசத்திற்கு வைகோவும் விலக்கல்ல என்பது மாதிரி இப்போது துரை வையாபுரி என்ற துரை வைகோவுக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
என் மகன் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை, தொண்டர்களும் நிர்வாகிகளும் அழைப்பதால் தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என்று வழக்கமாக வாரிசு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் போலவே வைகோவும் பேசி, வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மை அடிப்படையில் துரை வைகோவுக்கு பதவி வழங்க முடிவுவெடுக்கப்பட்டிருக்கிறது. இது வாரிசு அரசியல் இல்லை என்று பேட்டியும் கொடுத்திருக்கிறார்.
ஆனால், துரை வையாபுரியை துரை வைகோவாக அதிகாரப்பூர்வமாக ஆக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும், அங்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கும் வராமல் பல முக்கிய நிர்வாகிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இருந்தாலும், வந்தவர்களை வைத்து வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவுக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
துரை வைகோவிற்கு மதிமுக பொறுப்பு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் ஆளாக கட்சியை விட்டு விலகியிருக்கிறார் மதிமுகவில் 28 ஆண்டுகளாக இருந்த மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன். அவரைத் தொடர்ந்து அதிருப்தியில் இருக்கும் அவைத் தலைவரான திருப்பூர் துரைசாமியும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கட்சியை விட்டு விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
வாரிய அரசியலை எதிர்த்து உருவாக்கப்பட்ட கட்சியிலேயே வாரிசு அரசியலை நுழைப்பது சரிதானா ? என கேட்டு மதிமுகவின் 14 நிர்வாகிகள் போர்கொடி உயர்த்தி, கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
- திருப்பூர் சு.துரைசாமி ( அவைத்தலைவர்), 2.நாகர்கோயில் கோட்டார் கோபால் ( தணிக்கை குழு உறுப்பினர்.), 3. துரை சந்திரசேகரன் ( முன்னாள் அமைச்சர் புதுகோட்டை மாவட்ட செயலாளர்), 4. தேனி அழகு சுந்தரம்( கொள்கை பரப்பு செயலாளர்), 5. வழக்கறிஞர் தேவதாஸ் ( வழக்கறிஞர் பிரிவு செயலாளர்), 6. புலவர் செவந்தியப்பன் ( சிவகங்கை மாவட்ட செயலாளர்), 7. மாரியப்பன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர்), 8. டி.ஆர்.ஆர் செங்குட்டுவன் ( திருவள்ளூவர் மாவட்ட செயலாளர்), 9. திருச்சி வீரபாண்டி ( வழக்கறிஞர்), 10. ஈஸ்வரன் ( இளைஞரணி செயலாளர்), 11. சண்முகசுந்தரம் ( விருதுநகர் மாவட்ட செயலாளர்), 12.செல்வ ராகவன் ( திண்டுக்கல் மாவட்ட செயலாளர்), 13. மோகன் ( மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), 14.ஜெ.ராமலிங்கம் ( கடலூர் மாவட்ட செயலாளர்.)
அதிருப்தியில் இருக்கும் இந்த 14 பேரும் தனி அணியாக ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், வாரிசு அரசியலை எதிர்த்து உதயமான மதிமுக, வாரிசு அரசியலாலேயே உடையும் நிலை ஏற்பட்டியிருக்கிறது.