அண்ணாமலை மேற்கொண்டிருப்பது பாத யாத்திரை அல்ல. அது பாவ யாத்திரை - துரை வைகோ
காவிரிநீர் விவகாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அரசியல் கடந்து தீர்வு காண வேண்டும். அதைவிட்டு மலிவு அரசியல் செய்ய வேண்டாம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி இல்ல விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார்.
கருகும் பயிர்கள்:
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தென்னிந்தியாவின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய தஞ்சாவூர் மண்டலத்தில் விவசாயத்துக்கு தண்ணீரின்றி கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை வயல்கள் காய்ந்து கருகி வருகிறது. கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை வழங்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் ஏக்கருக்கு மேல் இருந்த விளைநிலங்கள் தற்போது 15 லட்சம் ஏக்கருக்கும் கீழ் குறைந்துவிட்டது.
தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் வறட்சியான சூழல் நிலவும் இந்நேரத்தில், கர்நாடகா தமிழகத்துக்கான தண்ணீரை வழங்காமல் வஞ்சிக்கிறது. வறட்சியான சூழலிலும் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் 4 மாதங்களுக்கு முன்பு வரை அங்கு ஆட்சியில் இருந்தது பாஜகதான். 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தபோது பாஜக தமிழகத்துக்கு சுமூகமாக தண்ணீர் வழங்கவில்லை. கர்நாடகா அரசு தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகின்றது. எப்போதெல்லாம் கர்நாடகாவில் அதிக மழை பெய்ததோ அப்போது மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகாவில் பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காவிரிநீர் விவகாரத்தில் தமிழகத்தில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அரசியலைக் கடந்து தமிழக விவசாயிகளுக்கு தீர்வு காண வேண்டும். இதுகுறித்து மலிவான அரசியலை செய்ய வேண்டாம். தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் ஏஜென்டாக செயல்படுகிறார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அம்மாநில கல்வி, அரசியலில் தலையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாடுக்கு போதிய நிதி வழங்காத நிலையில் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டிருப்பது பாத யாத்திரை அல்ல. அது பாவ யாத்திரை. ஐபிஎஸ் படித்த, நன்றாக உழைக்கின்ற இளைஞரான அண்ணாமலை, வலதுசாரி சிந்தனை உள்ள பாஜகவில் சேர்ந்தது, அவர் அண்மையில் அறிஞர் அண்ணா குறித்து பேசியது இவை ஏமாற்றம் அளிக்கிறது. அண்ணாமலைக்கு ஏற்ற இயக்கம் பாஜக அல்ல. சனாதனம், இந்து மதம் இரண்டும் வெவ்வேறானது. உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், தீண்டாமை, குலத்தொழில், பெண்ணடிமை போன்ற சனாதனத்தின் கோட்பாடுயும், மூடநம்பிக்கைகளையுமே நாங்கள் எதிர்க்கிறோம். இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றார். இதில், மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், துணை பொதுச் செயலாளர் ரொஹையா, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதாமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.