இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை மீனவருக்கு உதவிக்கரம் எங்களது மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர் என எம்பி சுதா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள், துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரின் உடலை மீட்டெடுக்க உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என குறிப்பிட்டு, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகவுக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 பைபர் படகுகளில் கடந்த செப்டம்பர் 20 -ம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மறுநாள் கரை திரும்ப வேண்டிய நிலை அவர்கள் கரை திரும்பததால் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது தெரியவந்தது.
37 மீனவர்கள் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர், இதுகுறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு பைபர் படகுகளில் இருந்த, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிய மீனவர்கள்
இந்நிலையில் எஞ்சிய இரண்டு பைபர் படகுகளில் 6 மீனவர்கள் தப்பி, பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர். தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில்; இந்திய கடற்பரப்பிலேயே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அப்பகுதியில் இலங்கை மீனவரின் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்தபோது உடலை தேடி வந்த இலங்கை மீனவர்கள், சற்று நேரத்தில் வந்து விடுகிறோம் அதுவரை அந்த இடத்திலேயே இருங்கள் என கேட்டுக்கொண்டனர். அதன்படி சற்று நேரத்தில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள், இறந்த சக மீனவரின் சடலத்தை மீட்டு சென்றனர். அப்போது அவ்வழியே வந்த இலங்கை கடற்படையினர் பூம்புகார் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக ஒரு விசைப்படகு மற்றும் இரு பைபர் படகுடன் கைது செய்ததாகவும், துரிதமாக படகை திருப்பி அங்கிருந்து இரண்டு படகுகளில் இருந்த தாங்கள் 6 பேர் தப்பிவந்தவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை எம்பியிடம் மீனவர்கள் கோரிக்கை
இந்நிலையில், மீனவர்களின் உறவினர்கள் அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதாவிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி இலங்கையில் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள அனுரா குமாரா திசநாயகவுக்கு மயிலாடுதுறை அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
இந்தியா இலங்கைக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமை… pic.twitter.com/ZxvknkmK3W
">
இலங்கை அதிபருக்கு கடிதம்
அந்த கடிதத்தில் இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்த எம்பி.சுதா மேலும் கடித்தில் கூறியதாவது: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பூம்புகார், சந்திராபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இவர்கள் படகு கவிழ்ந்ததில் துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரரின் உடலை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள். இச்சூழலில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளில் உள்ள ஷரத்துகளை மீறி, இலங்கை கடற்படை ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்துள்ளது. எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதேபோல், இலங்கை சிறையில் வாடும் மற்ற இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் அனைத்து படகுகளையும் கூடிய விரைவில் பயன்பாட்டு நிலையில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.