தளபதி பெயரை கெடுக்க சதியா? மயிலாடுதுறை மகளிர் அணி அமைப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் "தளபதியின் பெயரைக் கெடுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி சதி செய்கின்றனர் என மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு வெற்றி கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜயால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களை நீக்கி, போலியான பட்டியல் தயாரித்ததாக மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணியில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். யாருடைய தூண்டுதலின் பேரிலோ சிலர் கட்சியின் பெயரையும், தலைவரின் பெயரையும் கெடுப்பதற்காக இந்த பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் சசிகலா மற்றும் ஜான்சிராணி ஆகியோர் ஊடகங்களுக்குப் நேற்று முன்தினம் பேட்டி ஒன்றினை அளித்தனர். அதில், மாவட்ட அமைப்பாளர் தனலட்சுமி, தலைவர் விஜய் நியமித்த பொறுப்பாளர்கள் பட்டியலில் இருந்து ஏழு பேரை நீக்கி, புதியதாகப் போலியான பட்டியலைத் தயார் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த திடீர் குற்றச்சாட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
"பொறுப்பாளர்களை நீக்க எனக்கு அதிகாரம் இல்லை" - தனலட்சுமி மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்புப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தளபதி அறிவித்ததில் ஏழு பேரை நீக்கிவிட்டதாக 'பேக் நியூஸ்' (Fake News) கொடுத்துள்ளனர். இது முற்றிலும் பொய்யான தகவல். அந்த ஏழு பேர் உட்பட தலைவர் அறிவித்த அனைவரும் இப்போதும் பொறுப்பில்தான் உள்ளனர். அவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. தளபதிக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தனக்கு மற்றும் கட்சியின் பெயரைக் கெடுக்கும் வகையில் சதி நடப்பதாகக் கூறிய தனலட்சுமி, "யாருடைய தூண்டுதலின் பேரில், தளபதி பெயரையும், கட்சியின் பெயரையும் கெடுப்பதற்காக இந்த பொய்யான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள்? நாங்கள் யாரையும் பொறுப்பிலிருந்து எடுக்கவில்லை. தலைவர் அறிவித்த அனைவரும் பொறுப்பில் உள்ளனர்," என்று ஆவேசமாகக் கூறினார்.
பணம் வாங்கிய குற்றச்சாட்டையும் மறுப்பு
பொறுப்புகள் வழங்குவதற்காகப் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் தனலட்சுமி முற்றிலுமாக மறுத்தார்.
"யாரிடமும் நாங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பொறுப்பு போடவில்லை. பணம் வாங்குவது தளபதிக்கு அறவே பிடிக்காது. எங்கள் மாவட்டச் செயலாளருக்கும் அது பிடிக்காது. பெண்கள் ஆர்வத்துடன் கட்சிப் பணிக்கு வருவது பெரிய விஷயமாக உள்ள நிலையில், நாங்கள் எப்படிப் பணம் வாங்குவோம்? இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு," என்று தனலட்சுமி விளக்கமளித்தார்.
மேலும், "ஒன்றியத்திலும், நகரிலும் உள்ள மகளிர் அணியினர் எனக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரப் பதாகைகள் வைத்துள்ளனர். இதுவே நான் கட்சிப் பணிகளைச் சிறப்பாகச் செய்கிறேன் என்பதற்குச் சான்று. என்னுடைய பெயரையும், எங்கள் மாவட்டச் செயலாளர் பெயரையும் கெடுப்பதற்காக மட்டுமே இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பழிவாங்கும் நோக்கம்: சசிகலா - ஜான்சிராணி மீது குற்றச்சாட்டு
பொறுப்பில் இருந்து ஏழு பேரையும் நீக்கியதாகப் பேட்டி கொடுத்தாலும், அவர்கள் இன்னமும் பொறுப்பில்தான் நீடிக்கிறார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்திய தனலட்சுமி, பொறுப்பாளர்களை நியமிப்பதற்கோ, எடுப்பதற்கோ தளபதிக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றார்.
தனது நியமனம் குறித்துப் பேசிய அவர், "எங்களின் பொதுச் செயலாளரிடம் இந்த 11 பேரின் பெயர்களையும் நியமித்திட நானே நேரில் சென்று கொடுத்துள்ளேன். அப்படி இருக்கும்போது, நான் எப்படி அவர்களைப் பொறுப்பிலிருந்து எடுப்பேன்?" என்று கேள்வி எழுப்பினார்.
சசிகலா மற்றும் ஜான்சிராணி ஆகியோரின் உள்நோக்கம் குறித்துப் பேசிய தனலட்சுமி, "யாருடைய தூண்டுதலின் பேரிலோ என் மீதும், எங்கள் மாவட்டச் செயலாளர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்கும் நோக்கத்தோடு இதைச் செய்கின்றனர். ஜான்சிராணி என்பவர் எந்தவொரு கட்சி கூட்டத்திலும் கலந்து கொண்டதே இல்லை. சசிகலா சொல்வதால்தான் ஜான்சிராணி பேசி வருகிறார். இவர்கள் கட்சியின் பெயரைக் கெடுப்பதற்காக இவ்வாறு செயல்படுகின்றனர். எங்கள் தளபதிக்காக நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்," என்று ஆணித்தரமாகக் கூறினார்.
கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த உட்கட்சிப் பூசல் குறித்து த.வெ.க தலைமையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படுமா? என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் மயிலாடுதுறை தவெக கட்சித் தொண்டர்கள் மத்தியில்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.






















