"திமுகவின் தோல்விக்குப்" பெண்களும், விவசாயிகளுமே அடித்தளமாக அமைவார்கள் - ஜி.கே. வாசன் பேட்டி
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை நீடிப்பதால், வரும் தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்குப் பெண்களும் விவசாயிகளுமே முக்கியப் பங்காற்றுவார்கள் என்றும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள ஆதீன மடத்தின் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் 60-வது ஆண்டு மணிவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் எட்டாம் நாளான இன்று (நவம்பர் 8, 2025), முன்னாள் மத்திய அமைச்சரும், த.மா.கா. தலைவருமான ஜி.கே.வாசன் ஆதீன மடத்திற்கு வருகை புரிந்தார்.
ஆதீன மடாதிபதியிடம் ஆசி
மடத்திற்கு வருகை தந்த ஜி.கே. வாசன், தருமபுரம் ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து, மணிவிழா மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துத் தமிழக அரசியல் மற்றும் விவசாயப் பிரச்சனைகள் குறித்துப் பேசினார்.
சம்பா பயிர் காப்பீடு: காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிக்கை
ஜி.கே.வாசன் முதலில் விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்தார். “தற்போதைய சம்பா சாகுபடி பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கு நவம்பர் 15-ஆம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்ய ஏதுவாக, இந்தக் கடைசித் தேதியை மேலும் 15 நாட்கள் நீட்டித்துத் தர வேண்டும் என்று தமிழக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.
நியாயமான தேர்தலுக்கு விழிப்புணர்வு அவசியம்
வாக்காளர் பட்டியல் குறித்துப் பேசிய அவர், பிழையற்ற வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு மிக முக்கிய வழிவகுக்கும் என்றும், “வாக்காளர் திருத்தல் பட்டியல் குறித்துத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மிகவும் சரியானது. இந்தப் பட்டியலில் பிழைகள் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: தி.மு.க. அரசுக்குக் கண்டனம்
தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஜி.கே. வாசன், “தென் மாநிலங்களிலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, வன்முறை, கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடப்பது தமிழகத்தில்தான். இந்தக் கடுமையான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத அரசாகத்தான் தி.மு.க. அரசு விளங்குகிறது,” என்று குற்றம் சாட்டினார்.
“இன்று மாணவிகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறி நிற்கிறது. தி.மு.க.வின் இந்தக் கையாலாகாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில், பெண்களும் மாணவிகளுமே முக்கியப் பங்காற்றுவார்கள்,” என்று அவர் கூறினார்.
தேர்தல் கூட்டணி
தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே போட்டி நிலவும் என நடிகர் விஜய் தெரிவித்த கருத்து குறித்துக் கேட்கப்பட்டது. பதிலளித்த ஜி.கே. வாசன், தங்கள் கூட்டணியின் பலத்தை விளக்கினார். “இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி ஒரு பெரிய கட்சியாக உள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. ஒரு பெரிய கட்சியாக உள்ளது. இவர்களோடு தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்துள்ளன. வரும் காலங்களில் பி.ஜே.பி. – அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர்வார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை,” என்றார்.
தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் தங்கள் கூட்டணிக்கு வரும் என்பதால், வரும் தேர்தலில் தாங்கள்தான் முதல் அணியாகத் திகழ்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தி.மு.க.வின் தோல்விக்கு அடித்தளமாகும் விவசாயிகளின் கோபம்
விவசாயிகளின் நிலை குறித்துப் பேசிய ஜி.கே.வாசன், “விவசாயிகளின் வயிற்றில் அடித்த எந்த அரசும் சரித்திரத்தில் நிலைத்ததாகச் சரித்திரமில்லை,” என்றும். “தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, விவசாயிகளுக்கு ஏற்பட்ட எந்த நஷ்டத்திலும் அரசு அவர்களோடு துணையாக நிற்கவில்லை. இதனால் விவசாயிகள் தமிழக அரசின் மீது பெரும் கோபத்தில் உள்ளனர். வரும் தேர்தலில் தி.மு.க. அரசின் தோல்விக்கு விவசாயிகளே அடித்தளமாக அமைவார்கள்,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.





















