அதிமுக, திமுக-வுக்கு செக் வைத்த தவெக! மங்கைமடத்தில் அரங்கேறிய மெகா இணைவு விழா!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அதிமுகவை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் கோபிநாத் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

சீர்காழி: தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் பேராதரவு பெற்று பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) புதிய ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் மிக பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வின் கொள்கைகளாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் ஈர்க்கப்பட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாள்தோறும் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மங்கைமடத்தில், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெக-வில் இணையும் பிரம்மாண்ட விழா அரங்கேறியது. இக்கூட்டம் டெல்டா மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னணி நிர்வாகிகள்
மங்கைமடத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் மாற்றுக்கட்சி இணைவு விழாவிற்கு, அதிமுக-வின் மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவரான நாடி.மாமல்லன் தலைமை தாங்கினார். இவருடன் அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக-வின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த இந்த முன்னணி நிர்வாகிகள், தங்களது தாய் கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தவெக-வில் இணைவதாக அறிவித்தனர். இவர்களது தலைமையில் நாங்கூர், மங்கைமடம், நெப்பத்தூர் ஆகிய முக்கிய ஊராட்சிகளைச் சேர்ந்த அதிமுக, திமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மாவட்டச் செயலாளர் கோபிநாத்துக்குக் கிரேன் மூலம் மாபெரும் மாலை வரவேற்பு
இந்த இணைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கோபிநாத் -க்கு, மங்கைமடம் எல்லையில் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரலாறு காணாத வகையில் மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரளா பாரம்பரியச் செண்டை மேளம் முழங்க, ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டக் கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்டச் செயலாளர் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பியவாறு, வானவேடிக்கைகள் மற்றும் அதிரடிப் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
வரவேற்பின் உச்சகட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வாக, மங்கைமடம் சந்திப்பில் பிரம்மாண்ட கிரேன் (Crane) ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மாவட்டச் செயலாளர் கோபிநாத் விழா மேடைக்கு அருகில் வந்தபோது, அந்த கிரேனின் உதவியோடு தொண்டர்கள் தயாரித்து வைத்திருந்த மாபெரும் மலர் மாலையை அவருக்கு அணிவித்து தங்களது நெஞ்சார்ந்த வரவேற்பை வெளிப்படுத்தினர். தொண்டர்களின் இந்த அதிரடி மற்றும் உற்சாக வரவேற்பால் மங்கைமடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
சால்வை அணிவித்து முறைப்படி கட்சியில் இணைவு
இதனைத் தொடர்ந்து மேடையில் நடைபெற்ற முறைப்படியான இணைவு விழாவில், மாவட்டச் செயலாளர் கோபிநாத் முன்னிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகி நாடி.மாமல்லன் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் தங்களை முறைப்படி தவெக-வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். புதியதாகக் கட்சியில் இணைந்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மாவட்டச் செயலாளர் கோபிநாத் கட்சியின் அதிகாரப்பூர்வ சால்வையை அணிவித்து, இனிப்பு வழங்கி வரவேற்றார்.
அப்போது மேடையில் பேசிய மாவட்டச் செயலாளர், "தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசு, மக்களின் தேவைகளை அறிந்து மிகச் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறது. நம் தலைவரின் நேர்மையான அரசியலையும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையையும் ஏற்றுக்கொண்டு இன்று ஆயிரக்கணக்கில் இளைஞர்களும், பெண்களும், மாற்றுக்கட்சியினரும் தவெக-வை நோக்கி அணிவகுத்து வருகின்றனர். சீர்காழி மற்றும் மங்கைமடம் பகுதியில் இன்று இணைந்துள்ள இந்த 2,000 தோழர்களும், வரவிருக்கும் காலங்களில் கட்சியின் தூண்களாக விளங்கி, கட்சியின் புகழை மேலும் உயர்த்துவார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரம்மாண்ட இணைவு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, நகர, பேரூர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில அளவிலான முக்கியப் பிரதிநிதிகள் பலர் திரளாகக் கலந்து கொண்டு புதியதாக இணைந்த தோழர்களை வாழ்த்தி வரவேற்றனர்.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் சீர்காழி பகுதியில் ஒரே மேடையில் 2,000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தவெக-வில் இணைந்துள்ள இந்தச் சம்பவம், டெல்டா பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிமட்டக் கட்டமைப்பு எந்த அளவிற்கு அசுர வேகத்தில் வலுவடைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















