Kodanad Murder Case : ’கோடநாடு வழக்கிற்கு கூடுதல் டீம்’ தை மாதத்திற்குள் முக்கிய விஐபி-யை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்..!
’எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மற்றொரு முக்கிய வி.ஐ.பிக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டியுள்ளனர்’
கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த வழக்கு விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிசிஐடிக்கு கூடுதல் படை
கடந்த 5 ஆண்டுகளாக நீடித்து வரும் கோடநாடு வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க ஏதுவாக, சிபிசிஐடி போலீசாருக்கு கூடுதல் போலீசார் கொடுக்கப்பட்டுள்ளனர். கோவை, சேலம், தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த 10 உதவி ஆய்வாளர்கள் உள்பட 34 போலீசாரை சிபிசிஐடி போலீசாரின் கோடநாடு தனிப்படைக்கு மாற்றி சமீபத்தில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
ஐ.ஜி.சுதாகர் விசாரணையில் சிக்கிய வி.ஐ.பி
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம் சசிகலா வரை விசாரணையை விரிவுபடுத்திய நிலையில், வழக்கு அவசர அவசரமாக சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய விஐபி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக ஐ.ஜி. சுதாகர் கண்டறிந்ததாக கூறப்பட்ட நிலையில் வழக்கின் ஆவணங்களை அவர் சிபிசிஐடி வசம் ஒப்படைத்தார்.
49 பேர் கொண்ட தனிப்படையின் தீவிர விசாரணை
இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகேசன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு புலனாய்வு செய்து வருகின்றனர். மொத்தம் 49 பேர் கொண்ட இந்த தனிப்படையின் விசாரணையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரித்து ஒரு குறிப்பிட்ட விஐபி குறித்து அறிக்கை கொடுத்த நிலையில், அவருக்கு எதிராக சிபிசிஐடி போலீசாரும் கூடுதல் ஆதாரங்களை திரட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி பதற்றமடைந்தது ஏன் ?
கோடநாடு வழக்கில் அதிமுகவினர் குறி வைக்கப்படுகின்றனர் என குற்றஞ்சாட்டி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்டப்பட்டார். அவருக்கு நெருக்கமான நபராக அறியப்படும் சேலம் இளங்கோவன் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டதாலேயே எடப்பாடி பழனிசாமி பதற்றமடைகிறார் என திமுகவினர் அப்போது கூறினர்.
சிக்கிய புதிய ஆதாரங்கள் ; சிக்கலில் முக்கிய வி.ஐ.பி
இந்நிலையில், சசிகலா, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோரின் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் புதிதாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும் ஒரு முக்கியமான விஐபியை கைது செய்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் இந்த விபிஐயை கைது செய்வது தொடர்பான நடைமுறைகளை கேட்டு டிஜிபிக்கும் தமிழக உள்துறை செயலாளருக்கும் சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனவரிக்குள் கைது ?
அதன் அடிப்படையிலேயே டிஜிபி சைலேந்திரபாபு கோடநாடு வழக்கை விரைந்து முடிக்க ஏதுவாக கூடுதல் போலீசாரை சிபிசிஐடிக்கு கூடுதல் போலீசாரை கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஜனவரி மாதத்தில் அந்த விஐபி கைது செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.