TVK Vijay: எங்களைத் தாண்டி தொடுங்க.. விஜய்க்காக களமிறங்கப்போகும் அதிமுக! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை காவல்துறையினர் கைது செய்தால் அவருக்காக அதிமுக போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது. தமிழக அரசியல் களத்திற்கு புதியதாக வந்துள்ள விஜய் தீவிர அரசியலை முன்னெடுத்துள்ளார். அவர் அரசியல் களத்திற்கு புதியதாக இருந்தாலும் திரை உலகின் உச்சநட்சத்திரம் என்பதால் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
திருப்பம் ஏற்படுத்திய கரூர் துயரம்:
இந்த நிலையில், கரூரில் தமிழக வெற்றிக் கழகத்திற்காக தீவிர பரப்புரையில் விஜய் ஈடுபட்டபோது அவரைப் பார்க்க வந்த ரசிகர்கள், பொதுமக்கள் என கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த அரசியல் நகர்வையும் மாற்றியுள்ளது. முதல்தலைமுறை மற்றும் இளைஞர்கள் வாக்கு வங்கியை பெரியளவில் தன்வசம் வைத்துள்ள விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரை தங்கள் பக்கம் வைத்திருக்க அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக தங்களது கொள்கை எதிரி என்றும், பாஜக-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்றும் விஜய் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையிலும், திமுக - தவெக இடையேதான் போட்டி என்று தொடர்ந்து பேசி வந்த நிலையில் கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் பேசியது அதிமுக - பாஜக மட்டுமே ஆகும். இதன் பின்னணியில் அவரை கூட்டணிக்குள் கொண்டு வரும் வியூகம் இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
விஜய்க்காக களமிறங்கும் அதிமுக?
இந்த நிலையில், கரூர் துயர சம்பவத்தில் தற்போது வரை புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில், விஜய்யையும் கைது செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வலுவாக எழுந்து வருகிறது. ஆனால், இதுவரை விஜய் மீது எந்த ஒரு வழக்குப்பதிவும் அதிகாரப்பூர்வமாக பதிவாகவில்லை. ஒருவேளை விஜய்யை இந்த விவகாரத்தில் கைது செய்தால் அது திமுக அரசுக்கு எதிர்வினையை ஆற்றும் என்றும் கருதப்படுகிறது.

இந்த சூழலில், விஜய்க்கு எதிராக கைது நடவடிக்கையை ஒருவேளை காவல்துறையினர் மேற்கொண்டால் அவருக்கு ஆதரவாக தவெக-வினர் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். அவ்வாறு தவெக-வினர் போராட்டத்தை முன்னெடுத்தால் விஜய்க்கு ஆதரவாக அதிமுக-வினரும் போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை:
அரசியல் கட்சி தொடங்கியது முதலே திமுக, பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வரும் விஜய் அதிமுக-வை மிகப்பெரிய அளவில் விமர்சிக்காமலே இருந்து வருகிறார். திரைமறைவில் தவெக தரப்பிலும் பல கட்சியினருடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் இருந்தால் தவெக அவர்களுடன் கூட்டணிக்கு கரம் கோர்ப்பது ஏறத்தாழ அப்போதே உறுதியாகியிருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் தொடர்ந்து மெளனம் காத்து வரும் சூழலில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டது பாஜக தலைவர்களை சந்திக்க என்று ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மறுபுறம் அவர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கவே சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. எதுவாகினும் விஜய் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நகர்வே அவரது எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.





















