முதல்வர் இருக்கையில் விஜய்... இதுதான் எங்களின் முதல் நோக்கமே - தவெக பொறுப்பாளர் சொன்னது என்ன?
2026 தேர்தலில் இளைஞர்களின் வாக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகமாக இருக்கும் எனக் கூறினார்.
“2026 சட்டமன்றதேர்தலில் விஜயை முதல்வர் இருக்கையில் அமர வைப்பது எங்களது முதல் நோக்கம். இளைஞர்களின் எழுச்சி வரக்கூடிய தேர்தலில் அதிகம் இருக்கும்” என அரவக்குறிச்சி தவெக பொறுப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம், புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் முகாமில் தமிழக வெற்றிக் கழகம் அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் சதீஷ் குமார் ஏற்பாட்டில் முதல் வாக்காளர்களை அழைத்து வந்து 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை எவ்வாறு விண்ணப்பித்து பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்தனர்.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் வாக்காளர்களை அழைத்து வந்து முகாமில் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக அரவக்குறிச்சி பொறுப்பாளர் கூறுகையில்: வாக்காளர் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமூக வலைதளங்களின் மூலமாக, வார்டு பகுதியில் வார்டு செயலாளர்கள் மூலம் புதிய வாக்காளர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 18 வயது பூர்த்தி அடைந்த முதல் வாக்காளர்களுக்கு முகாமில் எப்படி பதிவு செய்வது என்னென்ன ஆவணங்களை எடுத்து வருவது என்று கூறி இதுவரை 20 புது வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.
வருகின்ற 2026 தேர்தலில் தளபதி விஜய் அவர்களை முதல்வர் இருக்கையில் அமர வைப்பது தான் எங்களது முதல் நோக்கம். அதேபோல் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் ஆர்வம் எங்களை வியப்படைய வைத்துள்ளது. 2026 தேர்தலில் இளைஞர்களின் வாக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகமாக இருக்கும் எனக் கூறினார்.