CM Siddaramaiah: சிக்கலில் சித்தராமையா.. புயலை கிளப்பும் முடா வழக்கு.. அவசரமாக காங்கிரஸ் கூட்டம்
Siddaramaiah Muda Issue: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது, மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நிலம் ஒதுக்கீட்டில் ‘ஊழல்’ தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் அரசியல் நிலப்பரப்பில் பரபரப்பு தொற்றியுள்ளது.
முதலமைச்சர் சித்தராமையா மீது ஆளுநர் விசாரணைக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து பதவி விலகக் கோரி பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
நில மோசடி புகார்:
முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பெயரில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அவருக்கு கூடுதல் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது , மனைவியின் சொத்து மதிப்பு குறித்து சித்தராமையா தெரிவிக்கவில்லை என சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் ஆளுநர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.
”பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை”
இது குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "இது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. முதல்வர் சித்தராமையா தலைமையில் வலுவான அரசு உள்ளது. ஆளுநர் அலுவலகத்தை பயன்படுத்தி அரசை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது.
#WATCH | On Karnataka Governor granting permission to prosecute CM Siddaramaiah in the alleged MUDA scam, Karnataka Deputy CM DK Shivakumar says, "...This is completely unconstitutional and against the law. There is a strong government led by CM Siddaramaiah. They (BJP) are… pic.twitter.com/CZDegdz83F
— ANI (@ANI) August 17, 2024
சித்தராமையா பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை, பதவியில் நீடிப்பார். "நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், முழுக்கட்சியும் அவருடன் நிற்கிறது. அவர் எந்த ஆட்சியிலும் எந்த தவறும் செய்யவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் பிரச்னை. ஆளுநர் அலுவலகத்தை இந்த பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. சட்டரீதியாக நாங்கள் போராடுவோம். இந்த நாட்டின் சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, எங்களது அரசாங்கம் பாதுகாக்கப்படும்" என்று சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று மாலை கர்நாடக காங்கிரஸ் கேபினட் இன்று மாலை கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஆளுநர் ஒப்புதல் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.