"ஊழல்தான் காரணம்.. நாட்டை திண்ணிட்டு இருக்கு" பொங்கி எழுந்த கங்கனா ரனாவத்
எந்த நபரும், எந்த அமைப்பும், எந்த ஒரு மத அமைப்பு கூட, சட்டத்தை விடப் பெரியதல்ல. அவர்கள் சட்டத்திற்கோ அல்லது அரசியலமைப்பிற்கோ மேலானவர்கள் அல்ல என பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

கரையானை போன்று நாட்டை செல்லரிக்க வைத்த ஊழலுக்கு வக்பு திருத்த மசோதா முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் பொங்கி எழுந்து பேசியுள்ளார்.
12 மணி நேர விவாதம்:
நாடாளுமன்ற மக்களவையில் 12 மணி நேர விவாதத்திற்கு பிறகு, வக்பு திருத்த மசோதா இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 232 எம்பிக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த 288 எம்பிக்கள், மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வக்பு திருத்த மசோதா குறித்து பாராட்டி பேசிய பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், "எந்த நபரும், எந்த அமைப்பும், எந்த ஒரு மத அமைப்பு கூட, சட்டத்தை விடப் பெரியதல்ல. அவர்கள் சட்டத்திற்கோ அல்லது அரசியலமைப்பிற்கோ மேலானவர்கள் அல்ல. அதுதான் இந்த மசோதாவின் சாராம்சம். கரையான்களைப் போல நம் நாட்டைத் தின்று கொண்டிருந்த ஊழல் இப்போது முடிவுக்கு வந்தது நமது அதிர்ஷ்டம்" என்றார்.
விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நாடாளுமன்ற மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "சில உறுப்பினர்கள் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. நானும் ஒரு சிறுபான்மையினர், நாம் அனைவரும் இங்கு எந்த பயமும் இல்லாமல் பெருமையும் இல்லாமல் வாழ்கிறோம்" என்றார்.
மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
மசோதாவில் வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பல அம்சங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. முஸ்லிம் அல்லாத ஒருவர் வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வர அனுமதிப்பது, மாநில அரசுகளால் தங்கள் மாநில வக்பு வாரியத்தில் குறைந்தபட்சம் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்க அனுமதிப்பது, சர்ச்சைக்குரிய சொத்து வக்பு நிலமா அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமானதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது ஆகியவை சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

