Tamilisai : ’அப்பா சாவில் அரசியல் – கூச்சநாச்சமே இல்லையா தமிழிசை?’ தாக்கிய பத்திரிகையாளர்..!
’தமிழிசை வீட்டு உணவை உண்ணாமல் திடமாக இருக்கும் வரை ஹோட்டல் உணவையே சாப்பிட்டு வந்த அக்மார்க் காங்கிரஸ் காரர் குமரி ஆனந்தன்’ அவரது சாவில் பாஜக கட்சியை குளிர்காய வைத்து அரசியல் செய்திருக்கிறார் தமிழிசை.!

காங்கிரஸ்-காரராக வாழ்ந்து மறைந்துள்ள குமரி ஆனந்தனை அவரது மகளும் பாஜக-காரருமான தமிழிசை கொச்சைப்படுத்திவிட்டார் என்று கொதித்து எழுந்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன். அப்படி என்ன செய்துவிட்டார் தமிழிசை ? என்பதை தன்னுடைய முக நூல் பக்கத்தில் அவரது முகத்திரையை கிழித்தெறிந்திருந்திருக்கிறார்.
இழப்பில் கூட ஆதாயம் – சாவித்திரி கண்ணன் கடும் தாக்கு
அந்த பதிவில் ‘அரசியல்வாதிகள் நம்மைப் போல இயல்பானவர்களில்லை என்று தொடங்கும் சாவித்திரிக் கண்ணன், மிகப் பெரிய இழப்பில் கூட, அரசியல் ஆதாயத்தை நோக்கியதாக இருக்கும் அவர்கள் நகர்வுகள் என்று குறிப்பிட்டு, தந்தையின் மறைவில் எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் ஆதாயம் அடைய முடியுமோ.., அவ்வளவையும் கூச்ச நாச்சமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார் தமிழிசை என்று கடுமையாக அவரை தாக்கியிருக்கிறார்.
காங்கிரஸ் காரருக்கு பல லட்சம் செலவில் பேனர் வைத்த பாஜகவின் தமிழிசை
கடைசி வரை காங்கிரஸ்காரராக இருந்து மறைந்த குமரி ஆனந்தன் இறந்த சூழலில், தான் வாழும் சாலிகிராமம் பகுதியை சுற்றிலும் குமரியாருக்கு பல லட்சங்கள் செலவில் பாஜக சார்பிலான பேனர் வைத்து திரும்பிய திக்கெல்லாம் அசத்தி இருந்தார் தமிழிசை என்று தெரிவித்துள்ள சாவித்திரி கண்ணம், தமிழிசை செய்த அளப்பறைகளால் குமரியாருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற காங்கிரஸ்காரர்கள் அனைவருமே பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்கள் என்று தன்னுடைய முகநூலில் அவர் எழுதியிருக்கிறார்.
காங்கிரஸ் பலனை பாஜகவிற்கு கொண்டுபோகும் முயற்சியை தடுத்த ஸ்டாலின்
குமரியாரின் 75 ஆண்டுகால காங்கிரஸ் பயணத்தின் பலனை அவரது இறப்பில் பாஜகவிற்கு கொண்டு போகும் தமிழிசையின் வேகத்தைக் உணர்ந்து கொண்ட ஸ்டாலின், திக்கெல்லாம் தீந்தமிழைப் பரப்பிய குரியாருக்கு திராவிட மாடல் அரசின் சார்பில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடத்தினார். முன்னதாக அவர் தங்குவதற்கு ஏதுவாக தனி வீடும் திமுக அரசு தான் ஏற்பாடு செய்து தந்தது என்று குறிப்பிட்டுள்ள சாவித்திரி கண்ணன்,
தமிழிசை வீட்டு உணவை உண்ண மறுத்த குமரி ஆனந்தன் ? சாவித்திரி கண்ணன் பொளேர்
குமரி ஆனந்தன் அவரிடம் நேரடியாக பகிர்ந்துக்கொண்ட ஒரு நிகழ்வையும் குறிப்பிட்டுள்ளார். அதில், ஏழட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஒரு நிகழ்வில் நான் வழங்கிய பாரம்பரிய சிறுதானிய இயற்கை உணவை விரும்பி ரசித்து உண்ட குமரியார் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, ’’சாவித்திரி கண்ணன் ரொம்ப அற்புதம். இது போல தினசரி சாப்பிடமட்டோமா..? என ஏக்கமாக உள்ளது. நான் நாளும் ஹோட்டல் உணவை உண்டு உடல் நலிந்து வருகிறேன். நீங்கள் ஒரு சின்ன உணவகம் ஆரம்பியுங்கள். எனக்கு வரும் எம்.பிக்கான ஓய்வூதியத்தை அப்படியே உங்ககிட்ட கொடுக்க சித்தமாயிருக்கேன்’’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே மாதிரி, தனித்து நடமாட முடிந்த வரையிலும் அவர் மகள் வீட்டிற்கு சென்று தங்க விரும்பாமல் வைராக்கியமாக இருந்தார் என்பதற்காகவே இந்த நிகழ்வை சொல்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் உண்மையான கதர்க்காரரான குமரி ஆனந்தன், பாஜக-காரரான தன் மகள் வீட்டு உணவைக் கூட உண்ண மறுத்தது அம்பலமாகியிருக்கிறது என்றும் அவரது சாவை வைத்து எப்படி தமிழிசையால் அரசியல் செய்ய முடிந்தது என்றும் சாவித்திரி கண்ணன் முகநூல் பக்க கமெண்டுகளில் கண்ணீர் வடிக்கிறார்கள் குமரி ஆனந்தனை பற்றி அறிந்தவர்கள்.
என் வீட்ல இருந்து இத செய்யக் கூடாது – கண்டித்த தமிழிசை – கண்கலங்கிய குமரியார்
மேலும், உடல் மிகவும் நலிவுற்ற நிலையில் தான் கடைசி சில வருடங்கள் மகள் தமிழிசையுடன் தங்க நேர்ந்தது. அப்போது வழக்கம் போல அவர் பாஜகவை கண்டித்து அறிக்கைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதைக் கண்ட தமிழிசை, தன் அப்பாவிடம் ’’இங்கே உட்கார்ந்து கொண்டு இதை செய்யக் கூடாது’’ என கண்டித்துள்ளார். இதை சத்தியமூர்த்தி பவனில் உள்ள கோபண்ணாவிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் குமரியார் என வருத்தப்பட்டுள்ளார் சாவித்திரி கண்ணன்.
தன் இறப்புக்கு பிறகு இப்படி ஒரு இழுக்கு நேரும் என நினைத்திருக்க மாட்டார் - கண்ணன்
ஆனால் இன்றோ, ’’தேசியவாதியாக இருந்த எனது தந்தை உயிரோடு இருந்திருந்தால் உள்துறை அமைச்சரே தன் வீட்டிற்கு வந்ததை எண்ணி பூரித்து போய் மகிழ்ந்திருப்பார்’’ என்று வேறு கதைக்கிறார் தமிழிசை! காந்தியைக் கொன்ற கட்சியை,நேருவை நிதமும் பழிக்கும் கட்சியை,காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே தன் இலக்கு என்று கர்ஜிக்கும் கட்சியின் தலைவரின் வருகை நிச்சயம் குமரியாருக்கு உவப்பாக இருந்திருக்காது.
தன் இறப்பிற்கு பிறகு தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்படிப்பட்ட இழுக்கு ஏற்படும் என்பதை அசல் காங்கிரஸ்காரான குமரியார் ஒரு போதும் நினைத்திருக்க முடியாது என்று எழுதியுள்ள சாவித்திரி கண்ணன், குமரியாருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காத காங்கிரஸ் கட்சியினரை பழித்துள்ளார்.





















