Jose Charles : ’ஐ.நா. மாநாட்டில் தமிழ்’ தாய்லாந்தை கலக்கிய ஜோஸ் சார்லஸ்..!
அன்பை நம் தலைமையின் அடிப்படையாக்குவோம். ஒன்றுபாட்டை நம் பலமாக்குவோம். சேவையை நம் பாதையாகக் கொள்வோம். - ஜோஸ் சார்லஸ்

தாய்லாந்தில் நடைபெற்ற ஐ.நா மாநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தமிழில் பேசி அசத்தியுள்ளார். இளைஞர்கள் நாளைய தலைவர்கள் அல்ல என்றும் இன்றைக்கான தலைவர்கள் என்றும் சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் போது மட்டுமே அரசியல் கட்சிகளால் இளைஞர்கள் நினைவுகூரப்படுகிறார்கள், இது ஜனநாயகத்திற்கான துரோகம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
Honoured to have been recognised with the SDG Impact Award at the 5th International Youth Forum 2025, by the United Nations in Bangkok.
— Jose Charles Martin (@sscharles) August 22, 2025
At the ceremony, I spoke about the importance of leading with love, of science-driven stewardship that reinvigorates the environment, and the… pic.twitter.com/GP5N1P6Xy8
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு மையத்தின் சார்பில் 5-வது சர்வதேச இளைஞர் மன்றத்தின் விழா நடைபெற்றது. கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்தியாவில் இருந்து சார்லஸ் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும் சமூக சேவகருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய ஜோஸ் சார்லஸ்
நான் தமிழ் நிலத்தில் இருந்து வருகிறேன். எங்கள் பெருநிலத்தின் வரலாறு மன்னர்களின் வெற்றிகளால் எழுதப்படவில்லை. மாறாக புலவர்களின் கவிதைகளாலும், புரவலர்களின் ஆரவாரமற்ற கொடையாலும் எழுதப்பட்டுள்ளது. சங்ககாலத்தைச் சேர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள்பாரியின் கதை உங்களுக்குத் தெரியும். ஒரு சங்கப்பா இவ்வாறு சொல்லுகிறது:“முல்லைக்கொடி காப்பன் பாரி போல உலகைக் காப்போம் நாம் இன்று.”
பாரி மன்னன் தன் தேரையே தியாகம் செய்து, ஏறிட இடமின்றி தவித்த முல்லை கொடியைத் தாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தச் செயல் கருணையும், காவலும் கரம்கோர்த்ததன் அடையாளம். ஓர் அரசனாக தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்ததால் தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவர் நினைவில் நிற்கிறார்.
தலைமைக்கான உண்மையான அளவுகோல் என்ன தெரியுமா? மிகவும் பாதிக்கப்பட்டவர்களை நீங்கள் எவ்வளவு கருணையுடன் காக்கிறீர்கள் என்பதே ஆகும். ஒரு பலவீனமான கோள் அல்லது பலவீனமான சமூகம்.
நிலையான வளர்ச்சி இலக்குகள் நமக்கு ஒரு வரைபடத்தைத் தருகின்றன. ஆனால் முதல் படியை எடுக்க வைக்கத் தைரியம் இல்லையென்றால் அந்த வரைபடத்தால் பலனில்லை. பயணம் என்பது நம் காலடியின் கீழ் இருந்து தொடங்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடகங்களால் இயக்கப்படும் புதிய தொழில்துறை புரட்சியில் நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது எவ்வளவு முக்கியமானதோ, நீராவி எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது எவ்வளவு முக்கியமானதோ அதற்கு இணையாக சமூக வலைதளங்களும், மெய்நிகர் நகரங்களும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவும் மனிதகுலத்தின் மிக கடினமான சிக்கல்களுக்கு தீர்வைத் தருகின்றன.
இந்தியாவில் புதிய கண்டுபிடிப்பாளர்கள், வேளாண் கண்டுபிடிப்பாளர்கள் வெறும் செல்போன் கேமரா மூலம் படமெடுத்து பயிர்களை தாக்கும் நோய்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில் பலரது வாழ்வாதாரங்களை காப்பாற்றி வருகின்றனர்.
2023-ம் வருடத்திய உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கை என்ன சொல்கிறது என்றால், 2027-ம் ஆண்டில் உலகில் 8.3 கோடி பழைய வேலைகள் அப்புறப்படுத்தப்பட்டு 6.9 கோடி புதிய வேலைகள் அதாவது எதிர்கால திறன்களை மையமாக கொண்ட வேலைகள் உருவாகும் என்று கூறுகிறது. குறிப்பாக நம்முடைய பகுப்பாய்வு சிந்தனை, சிக்கல்களை ஆக்கபூர்வமாக தீர்க்கும் திறன் மற்றும் தரவுகளை கையாளும் மேதமை இவை முக்கியம்.
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - சார்லஸ்
இன்று, பல இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கலாம் என நினைக்கின்றர். ஏன்? காரணம் என்னவென்றால், உண்மையாக சிந்திப்பவர்களை தண்டிக்கக் கூடிய வகையில் ஒரு சமூக கட்டமைப்பை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். அதுதான். பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமே மதிக்கும் ஒரு பண்பாட்டை உருவாக்கியுள்ளோம். நம்பிக்கைகளை பின்தொடர்பவர்களை அல்ல. அதேபோன்று தேர்தலின் போது மட்டுமே அரசியல் கட்சிகளால் இளைஞர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கான துரோகம்.
நீங்கள் நாளைக்கான தலைவர்கள் அல்ல. நீங்கள் இன்றைக்கான தலைவர்கள். எது சிதைக்கப்பட்டுள்ளதோ அதனை நோக்கி கேள்வி எழுப்பும் தார்மீக தெளிவு, எல்லைகளை கடந்த கற்பனைத் திறன், நியாயமான ஒன்றை உருவாக்கும் துணிச்சல் ஆகியவற்றை கொண்டவர்கள் தான் நீங்கள்.
சார்லஸ் குழுமம் மற்றும் மார்ட்டின் அறக்கட்டளை வாயிலாக தீர்வுகளை உருவாக்கும் பயணத்தில் உங்களோடு இணைந்து நடைபோட உறுதி ஏற்கிறேன். அரசின் நிர்வாகமும், செயல்பாடுகளும் முன்காலத்தைப் போன்று மீண்டும் மதிப்புடன் திகழ வேண்டும் என்று விரும்புகிறோம். சங்கக் கவிஞர் கபிலர் கூறியதுபோல்:
“அன்புடைமை ஆளும் உலகம்”
அன்பை நம் தலைமையின் அடிப்படையாக்குவோம்.
ஒன்றுபாட்டை நம் பலமாக்குவோம்.
சேவையை நம் பாதையாகக் கொள்வோம்.
அன்பே நமது தலைமை
ஒற்றுமையே நமது பலம்
சேவையே நமது முன்னேறும் பாதை
அதிதீவிரமாகவும், லட்சிய நோக்குடனும், இணைந்து செயலாற்றுவோம். இப்போதே தொடங்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் சிறப்புரையாற்றிய ஜோஸ் சார்லஸ் அவர்கள் சார்லஸ் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். தொழில்முனைவோர் என்ற பதத்தையும், சமூக பொறுப்பையும் இணைத்துக் கொண்டு வழிநடத்துவது எப்படி என்பதை அவர் தனது இலக்காக கொண்டுள்ளார். எம்ர்ஜிங் என்ட்ரப்ரூனர் ஆப் தி இயர் மற்றும் ட்ரென்ட்செட்டர் ஆப் 2024–2025 போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு அறுசுவை உணவளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















