3 ஆண்டுகள் விட்டுக்கொடுத்தாச்சு... இனியும் சமரசமா? பார்த்துக்கலாம் - ஓபிஎஸ் திட்டவட்டம்!
அதிமுக கட்சியில் தொடரும் சர்ச்சை - ஓ.பன்னீர்செல்வம் செங்கொட்டையன் சந்திப்பு
அதிமுக கட்சியில் தலைமை யாருக்கு என்பது குறித்து சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒற்றைத் தலைமை தொடர்பாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழுவை தற்காலிகமாக ஒத்திவைக்க சட்ட உதவியை நாட இருப்பதாக தம்பிதுரையிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 200-250 பேரிடம் கையெடுத்து வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. “இவ்வளவு காலம் நான் சமரசம் செய்துகொண்டேன். கடந்து 3 ஆண்டுகளாக சமரசம் செய்து கொண்டது போதும். இனியும் செய்துகொள்ள மாட்டேன். அதற்கு வாய்ப்பு இல்லை” என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதாக வெளிவரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமைக்கு பதிலாக 14 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலை செயல் திட்டக் குழு உருவாக்க வலியுறுத்த உள்ளதாகவும், இதுதொடர்பாக பேச ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு கே.ஏ.செங்கோட்டையன் வருகை தந்துள்ளார்.
அதிமுக தரப்பில் கடந்த சில நாட்களாக வெளிவந்த தகவலில்படி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவு இருந்து வருகிறது. அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 60க்கு மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய தம்பிதுரை தற்போது ஓபிஎஸ் வீட்டிற்கு வருகை புரிந்து சமரச பேச்சில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு குறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. மேலும், ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தால் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்படும் என ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை தலைமை இருந்தால் அது என்றோ ஒருநாள் ஆபத்தாக முடியும் என அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்து விட்டனர். இதன் காரணமாக வருகிற ஜுன் 23 ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியான ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலுவான கோரிக்கை எழுந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்