‘கோவை தொகுதியில் போட்டியிடுகிறாரா கமல்ஹாசன்?’ - வரும் 28 ம் தேதி மநீம தேர்தல் ஆலோசணைக் கூட்டம்
ம.நீ.ம. நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோவை மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கலந்தோசணைக் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது.
2024 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போது இருந்தே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பது, நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோவை மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கலந்தோசணைக் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் வருகின்ற 28 ம் தேதியன்று சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோவை, சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்தக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளில் வாக்கு வங்கி அதிகம் உள்ளது உள்ளிட்டவை குறித்து ஆலோசணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இதையடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டுள்ளார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே கடும் போட்டியிட்ட நிலையில், சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியை தழுவினார். இருப்பினும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளை மநீம பெற்றது. இதன்காரணமாக கோவையில் மக்கள் நீதி மய்யத்திற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் கமல்ஹாசன்?
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கோவை மக்களைவைத் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். மநீம திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் எனவும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு போல கடந்த சில மாதங்களாக திமுகவை அதிகமாக கமல்ஹாசன் விமர்சிப்பதில்லை. அதுமட்டுமின்றி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம ஆதரவு தெரிவித்தது. மேலும் கமல்ஹாசன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அத்தொகுதியில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்திலும் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணக்கமாக கமல்ஹாசன் உள்ள நிலையில், கோவை தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை மக்களவைத் தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வருவது வழக்கம். கடந்த முறை திமுக கூட்டணி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கமல்ஹாசன் போட்டியிட்டால் கோவை தொகுதி மநீமவிற்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் பாஜக கோவை தொகுதியில் போட்டியிடவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அதற்கேற்ப கோவையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்ட கூட்டமும் நடைபெற்றது. அதிமுக நேரடியாக போட்டியிடாத நிலையில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்டால், பிரபல நடிகர் என்ற பலமும், திமுக கூட்டணி கட்சிகள் வாக்குகளும் கமல்ஹாசன் வெற்றியை உறுதி செய்யும் என மநீம கட்சியினர் தெரிவித்தனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் கமல்ஹாசனும், அண்ணாமலையும் போட்டியிட்டால், இத்தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்