இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? தைரியம் இருந்தால் ஸ்டாலின் சொல்லட்டும் - எடப்பாடி பழனிச்சாமி
”பாஜகவில் இருந்து பிரிந்தது அதிமுக என நாம் சொன்னால் இல்லை பி டீமாக செயல்படுகின்றனர் என்கிறார் ஸ்டாலின். இதில் உங்களுக்கு என்ன கவலை” என கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிச்சாமி”
தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் சங்கரன்கோவிலில் அதிமுகவின் 52 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசும் பொழுது, ”இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்றால் அதிமுக ஆட்சி இருந்த காரணத்தால் தான். 30 ஆண்டு கால ஆட்சியில் தான் கிராமத்தில் இருந்து நகரம் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெறுவதற்கு திட்டம் கொண்டு வந்த அரசாங்கம் அதிமுக தான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும் அவர்கள் சாதனை இன்றும் மக்கள் மனதில் உள்ளது. குடும்பத்துக்காக துவங்கப்பட்ட கட்சி திமுக கட்சி, திமுக கட்சியல்ல, அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி. அதோட சேர்மன் ஸ்டாலின். அதற்கு டைரக்டர் உதய நிதி ஸ்டாலின். கனிமொழி, சபரீஸ்வரன், ஸ்டாலின் மனைவி துர்காம்மா, இவர்கள் எல்லாம் கம்பெனி. கார்ப்பரேட் கம்பெனி ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது.
இதில் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்கள்? ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். ரிப்பன் வெட்டுகின்றனர். மக்களை பற்றி கவலைப்படாத பொம்மை முதலமைச்சர் முக ஸ்டாலின். இந்த தென்காசிக்கு ஒரு திட்டமாவது கொண்டு வந்தாரா?? ஆனால் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பச்சை பொய் சொல்லும் முதலமைச்சர் பொம்மை முதலமைச்சர். தென்காசி உதயமானது அதிமுக ஆட்சியிலே.. நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைத்து கொண்டு இருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்ற ஸ்டாலின் குற்றச்சாட்டை மறுக்கின்ற வகையிலே அதிமுக ஆட்சியில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அதில் சிலவற்றை குறிப்பிட்டு சொல்கிறேன். 1.5 கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது. 2.70 கோடியில் ஆட்டின ஆராய்ச்சி மையம், 50 கோடி மதிப்பில் சங்கரன்கோவில் - ஆலங்குளம் குடிநீர் விரிவாக்கத்திட்டம் 37 கிராமங்களுக்கு வழங்கப்பட்டது. 43 கோடியில் சங்கரன்கோவில் நகராட்சியில் மறு சீரமைப்பு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது, 155 கோடியில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. 543 கோடி மதிப்பீட்டில் சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 250 கோடி மதிப்பீட்டில் நெல்லை - இராஜபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. 15 கோடியில் 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது. நடமாடும் ரேசன்கடை, 16 அம்மா மெடிக்கல் துவங்கப்பட்டது இந்த ஆட்சியில் மூடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் 119 கோடியில் கட்டப்பட்டது. கடையநல்லூர் தொகுதியில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 48 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மற்றும் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் 9 கோடியில் அமைக்கப்பட்டது. ஆலங்குளத்தில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி 10.5 கோடியில் அமைக்கப்பட்டது.
கடையநல்லூரில் புதிய அரசு கலை மற்றும் கல்லூரி 7 கோடியில் செயல்படுத்தப்பட்டது. அரசு தொழிற்பயிற்சி நிலையமும் துவக்கப்பட்டது. 300 கோடியில் கடைய நல்லூரில் சாலை பணி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது. 3.5 கோடி மதிப்பீட்டில் அனுமன் நதி குறுக்கே பாலம் கட்டப்பட்டது. தென்காசி பகுதியில் 3 ஆயிரத்து 860 விவசாயிகளுக்கு 90 கோடியே 49 லட்சம் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. ஆலங்குளம் தொகுதியில் 4300 விவசாயிகளுக்கு 138.62 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. 15 கோடியில் தென்காசியில் நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. 6.80 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் வசதி, சுற்றுசுவர் அமைத்து கொடுக்கப்பட்டது, 18 கோடியில் சுரண்டை அரசு காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வகுப்பறை, நூலகம், உள் அரங்கம், சுற்று சுவர் அமைத்து கொடுக்கப்பட்டது. 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு பாவூர்சத்திரத்தில் அமைக்கப்பட்டது என பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து சில திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர் என அதனையும் பட்டியலிட்டார். நீட் தேர்வு என்று ஸ்டாலினும், உதயநிதியும் தேர்தல் நேரத்தில் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தனர். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து ரத்து செய்யப்படும் என்றனர். எவ்வளவு நாள் ஆகிவிட்டது. எத்தனை கோப்பில் கையெழுத்திட்டனர்??. இப்போது கேட்டால் முயற்சி செய்றோம், ஆளுநரிடம் அனுப்பி விட்டோம் என சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழிக்கின்றனர். ஆட்சியில் இருக்கும் பொழுது ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு. மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்ற முடியவில்லை. அதிமுக அரசு ஏழைகளுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்துகின்ற அரசு. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் இன்று மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. அந்த அளவிற்கு மின்கட்டணம், அத்தியாவசிய பொருள் என அனைத்துமே விலை உயர்ந்துள்ளது. சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். இதனை திசை திருப்ப உதயநிதி சனாதானம் என்ற ஒரு ஆயுதத்தை எடுத்தார். அது நாடு முழுவதும் பற்றி எரிந்தது. இந்த அரசு மீதான வெறுப்பை திசை திருப்புகின்றனர். எப்போது பார்த்தாலும் திராவிட மாடல் என்று சொல்லி வருகின்றனர். ஊழல் செய்வதற்கு திராவிட மாடல் என பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவில் இருந்து பிரிந்தது அதிமுக என நாம் சொன்னால் இல்லை பி டீமாக செயல்படுகின்றனர் என்கிறார் ஸ்டாலின். இதில் உனக்கு என்ன கவலை என கேள்வி எழுப்பினார்? ஸ்டாலின் பயப்படுகிறார், அச்சப்படுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக, திமுக கூட்டணி வெற்றி பெறாது. நீங்கள் யாரை பிரதமராக சொல்வீர்கள் என ஸ்டாலின் சொல்கிறார், சரி நாங்கள் சொல்வது இருக்கட்டும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் உங்கள் கூட்டணியில் பிரதமர் யார் என்று சொல்ல முடிந்ததா? தைரியம் இருந்தால் சொல்லுங்க பார்க்கலாம் என்று சவால் விட்டார். மேலும் திமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்” என்று பேசினார்