Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
Karunanidhi Yellow Shawl: திமுக தலைவராக இருந்த கருணாநிதி ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு அணிந்ததாக அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் சட்டமன்றத்தில் கூறிய நிலையில், உண்மையான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ஜோசியத்தால் மஞ்சள் துண்டு அணிந்தாரா கருணாநிதி
தமிழக சட்டமன்றத்தில் இன்றைய விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், திமுக தலைவரான கருணாநிதி, ஜோசியத்தின் காரணமாக மஞ்சள் துண்டை அணிந்தார் என பேசியிருந்தார். இந்த பேச்சு சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மஞ்சள் துண்டு போட்டது ஏன் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தான் மஞ்சள் துண்டு அணிந்தது எதற்காக என்ற காரணத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், உடன்பிறப்பே, சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது. உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர்.
மஞ்சள் துண்டு - கருணாநிதி விளக்கம்
வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது. வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர். அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர். அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கிடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.
கழுத்து பகுதியில் கம்பளி துண்டு
டாக்டர்கள் வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் கழகக் கண்மணிகள்! கழுத்துப் பகுதியும் முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார்.
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திருக்கிறது என சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர்குமார் - சாரி சாரி நிர்மல் குமார் பேசியிருக்கிறார்..
— DMK IT WING (@DMKITwing) August 21, 2026
இந்த மாதிரி சில்லுண்டி அவதூறுகளுக்கு எல்லாம் நிர்மல் குமார் சங்கியாய் சிறுவயதில் திரியும்போதே… pic.twitter.com/jdN16J62Ix
டாக்டர் சொன்ன அறிவுரை
அப்படிக் கம்பளிச் சால்வை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர். அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் - இது நன்றாக இருக்கிறது - இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.
அடையாளமாக மஞ்சள் துண்டு
அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைபோல -சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல -சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன். இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும் கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர, சீற்றம் பிறக்கவில்லை என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















