‛பாஜக காக்கா கூட்டம்... பதவிக்கு ஓடும் அண்ணாமலை...தனித்து நிற்க அதிமுக தயார்’ -செல்லூர் ராஜூ தாக்கு!
‛‛முருகன் வேல் பிடித்தார் பதவி கிடைத்தது, தமிழிசை வந்தார் சிறப்பாக பணியாற்றினார், அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அது போல, தனக்கும் ஒரு பதவி கிடைக்கும் என்பதால் அண்ணாமலை பணியில் வேகம் காட்டுகிறார்’’
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
‛‛அதிமுக எழுச்சியாக இருக்கிறது. கட்சி எழுச்சியாக இருக்கிறது என்றால், மக்கள் எங்கள் பக்கம் என்று அர்த்தம். மக்கள் இன்று வருத்தப்படுகிறார்கள்; திமுகவிற்கு ஓட்டளித்ததற்காக வருத்தப்படுகிறார்கள். மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. குறிப்பிட்ட சில அமைச்சர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனர். என்றைக்குமே நாங்கள் தான் எதிர்கட்சி. அதிமுகவிற்கு ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளது. சாதாரண கட்சி அல்ல.
பாஜக, எங்கேயோ ஒரு இடத்தில் கூட்டம் போட்டு, அங்கு 5 ஆயிரம் பேரை, 10 ஆயிரம் பேரை திரட்டுவதில் பயனில்லை. எங்களுக்கு எல்லா இடத்திற்கும் கூட்டம். இது காக்க கூட்டம் இல்லை... கொள்கை கூட்டம். காக்கா கூட்டங்கள், இரைகள் போட்டா கூடும். இரை முடிந்ததும் பறந்துவிடும். நாகூர் போங்க, காலையில் புறாக்கள் இருக்கும். மாலையில் அவை வேளாங்கன்னியில் இருக்கும். அது மாதிரி இடம் மாறும் புறாக்கள் இருக்கு. இது மாதிரி கூட்டத்தை வைத்து கட்சி பலத்தை மதிப்பிடக் கூடாது.
எல்லா கட்சிகளுக்கும் நான் ஒரு சவால் விடுறேன். அதிமுக எந்த கூட்டணியும் இல்லாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. நாங்கள் ஏற்கனவே நின்றிருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்.,வும் அதை சொல்ல தயார். மற்ற கட்சிகள் இதை அறிவிக்க தயாரா? திமுக தயாரா? இதை எனது கருத்தாக எடுத்துக் கொள்ளாமல், அதிமுகவின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா கட்சியும் தனித்து நிற்கும் போது, அதிமுகவும் தனித்து நிற்கும். தொண்டரின் வாய்ஸ் தான், அதிமுகவின் வாய்ஸ். 21 வருசமா மாவட்ட செயலாளராக உள்ளேன். கட்சியின் பலம், பலவீனம் எனக்கு தெரியும். ஆளுங்கட்சியா இருக்கும் போது கூட பலர் கூட்டத்திற்கு வர மாட்டார்கள். இன்று, எதிர்கட்சியாக இருக்கும் போது ஏன் அழைக்கவில்லை என்று உரிமையோடு கேட்டு பங்கேற்கிறார்கள்.
அண்ணாமலை, கட்சியை வளர்க்க அரசியல் பண்றாரு. முருகன் வேல் பிடித்தார் பதவி கிடைத்தது, தமிழிசை வந்தார் சிறப்பாக பணியாற்றினார், அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அது போல, தனக்கும் ஒரு பதவி கிடைக்கும் என்பதால் அண்ணாமலை பணியில் வேகம் காட்டுகிறார். வி.பி.துரைசாமி எங்களை விமர்சனம் செய்கிறார் என்றால் என்ன நியாயம்? எதற்காக அவர் பாஜக சென்றார் என எங்களுக்கு தெரியாது. எங்கள் மீது துரும்பு வீசினால், தூணை கொண்டு நாங்கள் வீசுவோம்.
அதிமுக அமைதியாக இருக்கவில்லை. அமைதியாக இருக்கிறோம் என்றால், அது தான் பலமே. நாங்கள் சட்டையை கிழித்துக் கொள்பவர்கள் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் , எங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என கனிமொழி தேர்தலுக்கு முன் அறிவித்தார். அதுவா நடந்தது? அமைச்சர் ஒருவர் தான், ஒட்டு மொத்த பாரையும் நடத்துவதாக கூறப்படுகிறது,’’ என்று, செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.