Ops: அடுத்தடுத்து 4 வீடுகள் மாறிய ஓபிஎஸ்.! இதுதான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நந்தனத்தில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ஓபிஎஸ் 4 வீடுகளுக்கு மாறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 2000 ஆம் ஆண்டு டான்சி நிலப் பேரம் தொடர்பான வழக்குகளில் ஜெயலலிதாவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் 2001 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக வென்றாலும் அவரால் முதல்வராகப் பதவியேற்க முடியாத நிலை உருவானது.இதன் காரணமாக பல மூத்த தலைவர்கள் இருந்த போதும் யாரையும் நம்பாத ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு முதல் முறையாக எம்எல்ஏவான ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சராக்கினார்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் செல்வாக்கு அதிமுகவில் உயர தொடங்கியது. அதிமுக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளிலும் ஓபிஎஸ் நீடித்து வந்தார். மீண்டும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல் உருவான போது அப்போதும் நம்பிக்கைகுரியவராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கே முதலமைச்சர் பதவி சென்றது. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும், பொறுப்பு முதலமைச்சராகவும், ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சராகவும் ஓபிஎஸ் பொறுப்பு வகித்து வந்தார். இதனையடுத்து கட்சியில் நடைபெற்ற அடுத்தடுத்த மாற்றங்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் சட்டபோராட்டங்கள் தொடர்ந்த நிலையில் பின்னடைவே ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தும் தற்போது பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதனால் தனி அணியாக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களில் அடுத்தடுத்து 4 வீடுகளை காலி செய்து புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்து உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கேட்டார். அரசும் கூடுதல் அவகாசம் வழங்கியது.
இதனையடுத்து 2022ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்ற நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து விடப்பட்டார். இதனால் அந்த வீடு ராசியில்லையென கூறி தியாகராய நகருக்கு சென்றார். அங்கு சில மாதங்கள் மட்டுமே தங்கியிருந்தார். இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு குடியேறினார். அங்கும் சில மாதங்களே இருந்த நிலையில் தற்போது அங்கிருந்து புதிய வீட்டிற்கு மாறியுள்ளார். நந்தனம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் 2வது தளத்தில் அவர் தங்குவதற்கான வீடும், அதே பிளாட்டில் முதல் தளத்தில் அலுவலகம் செயல்பட உள்ளது.
இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் காவலர்களும் நந்தனம் குடியிருப்பு மாறியுள்ளனர். ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ஓ.பன்னீர் செல்வம் எந்த காரியம் செய்தாலும் கோயில்களுக்கு சென்ற பிறகு முடிவெடுப்பார். இதே போல ஜோசியத்திலும் அதிக நம்பிக்கையின் காரணமாக ஜோசியர் கூறியதன் அடிப்படையிலேயே தற்போது வீடு மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே புது வீடாவது ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவில் இணைய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்குமா.? என்பதை காலம் தான் முடிவு செய்யும்.





















