"சசிகலா மட்டுமல்ல; ஸ்டாலினே நினைத்தாலும் பாஜகவில் இணைத்துக் கொள்வோம்" - கே.பி.ராமலிங்கம்
ரேஷன் அரிசி கடத்தலை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கூட்டுறவுத் துறையை மத்தியஅரசு கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும் கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதி தமிழக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட புதிய உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கே.பி.ராமலிங்கம், தமிழகத்தில் இன்றைக்கு ஏழை எளிய மக்களுக்கு வழங்கக்கூடிய அரிசியில் 5 கிலோ அரிசி இலவசமாக மத்திய அரசுதான் வழங்கி வருகிறது. மீதமுள்ள 15 கிலோ அரிசியில் மானியமாக மத்திய அரசு கிலோவிற்கு தருகிறது. மேலும் மருத்துவ பாதுகாப்பை நாட்டு மக்களுக்கு தந்ததில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதற்கான சான்றுகளை தமிழக அரசு பெற்றுள்ளது.
தமிழகத்திற்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது மட்டுமில்லாமல் தேவை என்று கேட்பதற்கு முன்பாக வழங்கியுள்ளது. பணியாற்றுகின்ற முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக அரசு மத்திய அரசுக்கு ரூபாய் 25,000 கோடி வழங்க வேண்டி உள்ளது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்காத அரசாக மத்திய அரசு விளங்கி வருகிறது. இருப்பினும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதாக குற்றம்சாட்டி வருகின்றனர். பாகுபாடு இன்றி மத்திய அரசு தமிழக அரசுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி சிறப்பித்து வருகிறது. இன்னும் ஏராளமாக செய்வதற்கு பிரதமர் தயாராக உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்னொரு கட்சியை, பாரதிய ஜனதாக் கட்சி எப்போதும் அழிக்க நினைக்காது, நாங்கள் வளரும் போது அவர்கள் அழிவாக நினைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். நாங்க வளர விரும்புகிறோம், வளர்கிறோம் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பேசினார். பாஜகவின் கொள்கை பிடித்து, பாஜகவில் இணைந்து கொள்ள சசிகலா மட்டுமல்ல முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் பாரதிய ஜனதா கட்சி இணைத்துக் கொள்வோம், ஏற்றுக்கொள்வோம் எனவும் கூறினார். தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இதில் அமைச்சர்களின் பங்கு உள்ளதாக மக்கள் கருதுகின்றனர். இதற்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கூட்டுறவுத் துறையை மத்தியஅரசு கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும் கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியும் என்பது தான் பாஜகவின் அகராதி. அதற்குத்தான் முயற்சிக்கிறோம், முடியும் என்று நம்புகிறோம். நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நோக்கி நாடு போகும்,தமிழகத்தில் பாஜக ஆட்சி பீடத்தில் கண்டிப்பாக ஏறும் நம்பிக்கையுடன் உழைக்கிறோம் என்று பேசினார்.