Erode East By-Election: ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு - ஓ.பன்னீர்செல்வம்
ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் கூட்டணியில் போட்டியிட போவது அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா? என்று இன்னும் இழுபறியாகவே உள்ளது.
அண்ணாமலை சூசகமாக கூறியதன் அடிப்படையில் அ.தி.மு.க. போட்டியிட உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், அ.தி.மு.க. தரப்பில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆதரவு கோரினார்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டி:
இந்த சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டியில், "ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது. இக்கட்டான சூழலை பழனிசாமி தரப்பு உருவாக்கிவிட்டனர். பிரிந்துள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் மனநிலை.” என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் எந்த குளறுபடியும் இல்லாத நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து குளறுபடியிலே சென்று கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் தங்களது கூட்டணி கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
போட்டியிட மும்முரம்:
ஓ.பன்னீர்செல்வம் இன்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்தது போல, நேற்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏ.சி.சண்முகத்தை சந்தித்துள்ளனர். ஆனால், அவர் பா.ஜ.க. முடிவுக்குத்தான் கட்டுப்படுவேன் என்று கூறியதால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் நேற்று தன்னுடைய 87 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று கூறினார். இந்த சூழலில் அவர் இன்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மும்முரம் காட்டி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் இடைத்தேர்தலில் களமிறங்க தீவிரம் காட்டி வரும் நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் இரு தரப்பினரும் போட்டியிட மோதி வருவதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
27-ந் தேதி தேர்தல்:
அடுத்த மாதம் 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் வலுத்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்புள்ளது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.