வாக்கிங் டைம்ல ஆய்வு... அமைச்சர் செந்தில்பாலாஜியின் ’தூய்மை கரூர்’ விசிட்!
நேற்று முன்தினம் கரூரில் தூய்மை கரூர் திட்டத்தை தொடங்கி வைத்த மின்சாரத்துறை அமைச்சர் இன்று காலை நடை பயிற்சியில் நடைபெற்றுவரும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
கரூர் நகரில் வடிகால்கள் பராமரிப்பு இல்லாததால் புதிதாக அமைக்க வேண்டியுள்ளது. பாதாளசாக்கடை திட்டத்திற்கு 360 கோடி, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க 40 கோடி அளவில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.
கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ள நிலையில் "தூய்மை கரூர்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் நடைபெறும் இடங்களில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட படியே இன்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை 6.00 மணி தொடங்கி 8.00 மணி வரை இரண்டு மணி நேரம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி -
கரூர் நகராட்சியில் 268 கிலோ மீட்டர் தொலைவில் வடிகால்கள் உள்ளன. 2968 தெருக்கள் உள்ளன. இப்பகுதிகளில் "ஒரு நாள் ஒரு வார்டு - ஒருநாள் ஒரு ஊராட்சி" என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலங்களில் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் பல்வேறு இடங்களில் வடிகால்களில் ஒரு அடி அளவிற்கு மண் திட்டுகள் தேங்கி உள்ளன. மழைநீர் செல்ல முடியாத மோசமான சூழ்நிலை உள்ளது. எனவே சிறப்பு திட்டத்தின் கீழ் நகராட்சி முழுவதும் புதிய வடிகால்கள் அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்ய நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.
கரூர் பஸ் பாடி, கொசுவலை, டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்கள் சார்ந்த தொழில் நகரம். கிட்டத்தட்ட 8,000 முதல் 10,000 கோடி அளவிற்கு வருவாய் உள்ளது. நகரத்தில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.பாதாள சாக்கடை திட்டத்திற்கு 360 கோடி மற்றும் குடிநீர் விநியோகத்திற்கு புதிய குழாய்கள் மாற்றி அமைக்க 40 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், கரூர் மாவட்டத்திற்கு அடிப்படை வசதிகளுக்காக தற்போது 1000 கோடி அளவுக்கு நிதிகள் தேவை உள்ளது என தெரிவித்தார்.மின்சாரத்துறை அமைச்சர் காலை விசிட்டால் ஆடிப் போன அதிகாரிகள். அதே நிலையில் துப்புரவு பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அமைச்சர் வருகை ரசித்தனர்.கரூர் மாவட்டத்தில் இன்று காலை நடைப்பயிற்சியில் மேற்கொண்ட படி தூய்மை கரூர் திட்டத்தின் பணிகளை ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் நிகழ்ச்சியில் கரூர் நகராட்சி ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.