கட்சியை கைப்பற்றிய அன்புமணி! சைலன்ட்டாக சாதித்தது எப்படி ? மாம்பழச் சின்னம் கிடைத்ததின் பின்னணி என்ன ?
"பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ள நிலையில், புது கட்சி தொடங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது"

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் பாமக இரண்டாக பிளவு பட்டு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணியை கட்சியை விட்டு நீக்கியதாக ராமதாஸ் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இரண்டு ஆவணங்களை அன்புமணி ராமதாஸ் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அன்புமணி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் இருப்பது என்ன, கட்சியின் முழு கட்டுப்பாடு யாரிடம் இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலு சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. இந்த கடிதத்தின் வாயிலாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி தொடர்பார் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் மூலமாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும்,பொருளாளராக திலகபாமாவும் தொடர்வார்கள் மற்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்களும் அந்த பொறுப்பில் அப்படியே தொடர்கிறார்கள் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் கொடுத்துள்ளது என தெரிவித்தார்.
தலைமை அலுவலகம் எங்கு உள்ளது?
பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைமை அலுவலகம் இனி சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள இந்த இடம்தான் தலைமை அலுவலகம் என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்து இருந்தது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போட்டியிடக் கடிய வேட்பாளர்களுக்கு பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியும்.
மாம்பழம் சின்னம் யாருக்கு?
பாமக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு A பார்ம், B.பார்ம் கையொப்பமிடும் அனுமதியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. டாக்டர் ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதே நேரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் கட்சியினுடைய கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும் மற்றவர்கள் பயன்படுத்தக் கடாது.
பிரிந்தவர்கள் ஒன்று சேருங்கள்
இனி வரும் காலங்களில் பாமகவில் இரண்டு அணி என்று சொல்லுவது தவறானது. இனி பாமகவில் தனித்தனி அணிகள் எதுவும் கிடையாது ஒரே அணி தான் அது டாக்டர் அன்புமணி தலைமையிலான பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மட்டும்தான் பாமகவை சேர்ந்தவர்கள். பாமகவில் ஏற்பட்ட சிறு குழப்பத்தின் காரணமாக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இந்த கடிதத்தின் வாயிலாக அவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். பாமகவை மேலும் வலிமையாக்க ஒதுங்கி இருப்பவர்கள், விலகி நிற்பவர்கள் டாக்டர் அன்புமணியின் தலைமையை ஏற்று இந்த பக்கம் வரவேண்டும் எனவும் பாலு அழைப்பு விடுத்தார்.
அங்கீகரிக்கப்படாத கட்சியில் தேர்தல் ஆணையம் தலையிடுமா?
பாமக தற்போது அங்கீகாரத்தை இழந்த கட்சியாக இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட முடியுமா என்ற கேள்விக்கு, பாட்டாளி மக்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து, தற்போது அங்கீகாரத்தை இழந்து இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வழங்க அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் சின்னத்தையும் இந்த அங்கீகார கடிதத்தையும் வழங்கி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
என்ன செய்யப் போகிறார் ராமதாஸ் ?
பாமக தலைவர் அன்புமணி தரப்பிலிருந்து வெளிவந்துள்ள இந்த முக்கிய ஆவணங்கள் குறித்து விரைவில் ராமதாஸ் தரப்பில், அடுத்த கட்ட முடிவெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நாளை தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















