AIADMK Opposition Leader: எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வான கடிதம் சட்டமன்ற செயலரிடம் ஒப்படைப்பு
16வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில், அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் முன்னாள் அமைச்சர்கள் வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது.
திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும், புதிய அமைச்சர்களும் தங்களின் துறைசார்ந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதுஓருபுறம் இருக்க இன்னும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்று முடிவு செய்யப்படாம இருந்த நிலையில், திமுகவில் இந்த பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவிவந்தது.
கடந்த 7ஆம் தேதி காலை திமுக ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து, அன்று இரவு அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக சென்னை ராயாப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டத்து. கூட்டத்தில், முதலில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. எப்போதும் அமைதியாக இருந்து கடைசியல் கருத்து சொல்லும் ஓபிஎஸ், இம்முறை ஆரம்பத்திலேயே அடித்து விளையாடத் துவங்கியுள்ளார். ‛‛நீங்க எடுத்த தவறான முடிவு தான்... கட்சி தோற்க காரணம்...’’ என, எடுத்த எடுப்பிலேயே இபிஎஸ்-யை நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவ்வளவு தான், இபிஎஸ்-யும் பதிலுக்கு பாய்ந்தார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய செய்ய அதிமுக
இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்ற நிலையில், இறுதியாக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் வழங்கினர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கே.பி அன்பழகன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், கே.பி.முனுசாமி, சேவூர் ராமச்சந்திரன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் உடன் சென்றனர்.
முன்னதாக, ஓபிஎஸ் - இபிஎஸ்க்குள் இணக்கமான முடிவு எட்டப்படவில்லை என்றால் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக அறிவிக்கலாம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் யோசனை கூறியது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்கட்சி தலைவராக ஓபிஎஸ் பரிந்துரை செய்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.