மேலும் அறிய
’திமுக தில்லுமுல்லு செய்யும் என்பதால் வாக்கு எண்ணும் போது கவனம்’- அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
’’விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல வேட்பாளர்களின் முகத்தை பார்க்கும் பொழுது இப்போதே வெற்றி பெற்றது போல் தோன்றுகிறது’’

எடப்பாடி பழனிச்சாமி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 11 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கும். 98 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். காஞ்சிபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், காஞ்சிபுரம் தேர்தல் விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். அப்பொழுது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், தற்போது நாம் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறோம் ஆனாலும், வேட்பாளர்களை பார்க்கும்போது இப்பொழுதே வெற்றி பெற்றதாக தோன்றுகிறது என தெரிவித்தார்.

சட்டமன்றம், நாடாளுமன்றம் தேர்தலைவிட மிக முக்கியமான தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல், மக்களுக்கு நேரடியாக பணி செய்வதற்கு உள்ளாட்சித் தேர்தல் தான் வழிவகுக்கும் எனக் கூறினார். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், "விளையும் பயிர் முளையிலே தெரியும்" அது போல வேட்பாளர்களின் முகத்தை பார்க்கும் பொழுது இப்போதே வெற்றி பெற்றது போல் தோன்றுகிறது என தெரிவித்தார். நம்முடைய எதிரிகள் குறுக்குவழியில் செயல்படுபவர்கள். திமுக நிச்சயம் தில்லுமுல்லு வேலை செய்து வெற்றி பெற முயற்சி செய்வார்கள். அதை மீறி நாம் வெற்றி பெற வேண்டும்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றது. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சியில் 2 மாவட்ட வார்டு உறுப்பினர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே இவ்வாறு செய்துள்ளனர். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுவை நிராகரித்தது தவறு, இது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதிமுகவை நேரடியாக எதிர்க்க சக்தி இல்லாததால், அங்கு இருக்கும் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இணைந்து கொல்லைப்புறமாக வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர்.

திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது ஆனால் அதில் 1, 2 மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, சமையல் எரிவாயு மாதம் 100 ரூபாய் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியும் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்யவில்லை. அதே போல தமிழ் நாட்டில் 35 லட்சம் முதியோர்கள் அரசு ஓய்வூதியத்தை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு 1500 ரூபாய் உயர்த்தி கொடுக்கப்படும் என திமுக தெரிவித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலினும் மாறிமாறி மேடைகளில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி வந்தனர். ஆனால் நீட் தேர்வு தற்போது நடைபெற்று தான் வருகிறது.

திமுகவின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது என தெரிவித்தார். திமுக ஆட்சி வந்தால் தானா ரவுடிகள் வெளியே வந்துவிடுவார்கள் அதற்கு எடுத்துக்காட்டு தான் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும் பேசுகையில், வாக்கு எண்ணும் போது கவனமாக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், திமுகவினர் ஏஜென்ட் திசை திருப்பி வாக்குகளை மற்றிவிடுவார்கள் எனப் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, காமராஜ், பெஞ்சமின் உள்ளிட்ட ஏராளமானோர் அதிமுகவினர் கலந்து கொண்டனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement