Vijay TVK: விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ED? முடங்கும் SK-வின் பராசக்தி? தேர்தல் பரப்புரையாக வரும் “ஜனநாயகன்”
Vijay TVK: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்திருக்கும் அமலாக்கத்துறை சோதனையால், விஜய்க்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijay TVK: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்திருக்கும் அமலாக்கத்துறை சோதனை, பல்வேறு அரசியல் கணக்கீடுகளை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகாஸ் பாஸ்கரன் வீட்டில் சோதனை:
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதில், அண்மையில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த சோதனை தான் பல்வேறு தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. காரணம் இந்த சோதனை என்பது பண முறைகேடு என்பதை தாண்டி, பல்வேறு அரசியல் கணக்கீடுகளை உள்ளடக்கியது என கூறப்படுகிறது. சாதாரண நகைக்கடை உரிமையாளரின் மகன் ஒருவர் எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான, காய் நகர்த்தல்களில் முக்கிய நபராக உருவெடுத்தது தான் இந்த ஒட்டுமொத்த சோதனைக்கான தொடக்கப் புள்ளியாகும்
ஒரே நேரத்தில் 450+ கோடி?
சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகனான ஆகாஸ் பாஸ்கரன், ஆரம்பத்தில் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல பிரமாண்ட பட்ஜெட் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். தனுஷின் இட்லி கடை, சிம்புவின் அடுத்த படம் மற்றும் சிவகார்த்திகேயானின் பராசக்தி ஆகிய படங்களையும் தயாரிக்கிறார். இதுபோக இதயம் முரளி எனும் படத்தை தயாரித்து, இயக்கியும் வருகிறார். இந்த படங்களின் பட்ஜெட்டே 450 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இவரது வளர்ச்சி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கருணாநிதி குடும்ப உறவினர்:
ஆகாஸ் பாஸ்கரன் அண்மையில் தான் கவின் கேர் நிறுவனத்தின் தலைவரான சி.கே ரங்கநாதனின் மூன்றாவது மகளான தாரணியை திருமணம் செய்துக்கொண்டார். தாரணியின் அம்மாவான தேன்மொழி தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தி ஆவார். இந்த திருமண நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி, தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். கருணாநிதி குடும்பத்துடன் உடனான இணைவுக்கு பிறகு தான், ஆகாஷ் பாஸ்கரன் மளமளவென வளர்ச்சியை கண்டதாக கூறப்படுகிறது. எனில் படத்தயாரிப்பிற்கான மூலதனம் எங்கிருந்து வந்தது? வருமானத்திற்கான ஆதாரம் என்ன? முறைகேடு பணம் ஏதேனும் சட்டவிரோதமாக படதயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பன போனேற பல்வேறு சந்தேகங்கள் அடிப்படைடில் தான் அமலாக்கத்துறை இந்த சோதனையில் களமிறங்கியுள்ளதாக தெரிகிறது.
ஜனநாயகன் Vs பராசக்தி:
தேர்தல் அரசியலில் குதிப்பதற்கு முன்பாக விஜய் நடித்து வரும் கடைசி படமான ஜனநாயகன் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக அறிவிக்கப்பட்டது. அரசியல் சார்ந்த கதைக்களம் கொண்ட இந்த படத்தை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் பரப்புரையாக பயன்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஜனவரி 9ம் தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்த சில மணி நேரங்களிலேயே, 2026 பொங்கலுக்கு தான் தயாரித்து வரும் பராசக்தி படமும் வெளியாகும் ஆகாஷ் பாஸ்கரன் அறிவித்தார். இது திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு வேலை என அப்போதே அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியது. காரணம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கணக்கீடுகள்:
ஜனநாயகன் படத்தின் மூலம் ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பையும், தனது அரசியல் இமேஜையும் மேலும் அதிகமாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அதேநேரம், பராசக்தி படத்தை போட்டியாக வெளியிடுவதன் மூலம் விஜய் படத்திற்கு ஒதுக்கப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கையை குறைக்க ரெட் ஜெயண்ட் தரப்பு திட்டமிட்டுள்ளது. அதோடு, பராசக்தி படம் திராவிட சித்தாந்தங்களை தூக்கிப்பிடித்து பேசும் ஒரு படமாகவே உருவாகி வருவதால், அதனை தங்களுக்கு சாதகமான தேர்தல் பரப்புரையாக பயன்படுத்தவும் திமுக தரப்பு ஆலோசித்துள்ளது. இதன் மூலம் ஜனநாயகன் படத்தின் வெற்றி மற்றும் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தி, அதனை விஜய்க்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படலாம். தோல்வியுடனே திரைத்துறையில் இருந்து வெளியேறினார் என மனதளவில் விஜயை முடக்கவும் இந்த திட்டம் போடப்பட்டதாம். இதுபோக, ஜனநாயகன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தனக்கே வழங்க வேண்டும் என, அதனை தயாரிக்கும் கேவிஎன் புரொடக்ஷனை ஆகாஷ் பாஸ்கரன் தரப்பு நிர்பந்தித்ததாகவும் சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ED?
இந்நிலையில் தான், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதனடிப்படையில் விரைவில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இட்லிகடை, STR49 மற்றும் பராசக்தி ஆகிய படங்களின் தயாரிப்பு பணிகளும் முடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், 2026 பொங்கலுக்கு விஜயின் ”ஜனநாயகன்” திரைப்படம் சோலோவாக ரிலீஸாகி திரையரங்குகளை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கலாம்.
எதிர்வரும் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணியை அமைப்பது மட்டும் போதாது என்பதை உணர்ந்தே, திமுகவின் வாக்கு வங்கியை உடைக்கவும் முன் வந்துள்ளது. அதற்கான நடவடிக்கையாக தான், விஜய்க்கு எதிரான தமிழக ஆளும் கட்சியின் திட்டத்தை முறியடிக்க அமலாக்கத்துறையை களமிறக்கியதாக கூறப்படுகிறது. விஜய் மூலம் திமுகவின் வாக்கு வங்கி சிதறினால், அது தங்கள் கூட்டணிக்கு சாதகமான முடிவுகளை வழங்கும் என்பதே பாஜக மேலிடத்தின் கணக்காம்.





















