மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
MGR - Duraimurugan: "மயங்கி விழுந்தார் துரைமுருகன்...மடியில் ஏந்தினார் எம்ஜிஆர்"...பாசமழை நிகழ்வு தெரியுமா?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே, சட்ட சபையில் நிகழ்ந்த பாச போராட்டம் குறித்து மூத்த ஊடகவியலாளர் ஆர். நூருல்லா பதிவு செய்துள்ளார்.
![MGR - Duraimurugan: Duraimurugan fainted MGR held it on his lap says journalist noorullaa statement about their relations MGR - Duraimurugan:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/24/f4abb0a43a898ebcdda66a455b4577021671884310227571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மறைந்த முன்னாள் முதலமைச்சர், எம்.ஜி.ஆர், அமைச்சர் துரைமுருகன்
நூருல்லாவின் பதிவுப்படி, “அப்போது செய்தியாளராகச் சட்டமன்றச் செய்திகளை எழுதுவதற்காகச் சென்றிருந்தேன். எம்ஜிஆர் முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. சட்டமன்றம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் வரிசையில் துரைமுருகன், சட்டமன்றத்தையே சகட்டு மேனிக்கு கலக்கிக் கொண்டிருந்தார்.”
சீறி பாய்ந்த துரைமுருகன்:
ஆளும் கட்சியை, குறிப்பாக முதல்வர் எம்ஜிஆரை விமர்சித்து, துரைமுருகன் சூடும் சுவையும் கலந்த வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைத்து, அரசின் நடவடிக்கைகளை துவைத்து எடுத்து வந்தார். அதிமுக உறுப்பினர்களோ துரைமுருகன் மீது சீறிப் பாய வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு சினம் கொண்டிருந்தனர். ஒரு முறை தாமரைக்கனி, ஆளுங்கட்சிப் பக்கத்திலிருந்து தடுப்பு மேசையைத் தாண்டி வந்து, தாக்கினார்.
துரைமுருகன் இவ்வளவு ஏசினாலும், எம்ஜிஆர் மட்டும் துரைமுருகனின் கிடுக்கிப்பிடி வாதங்களை முறுவல் பூத்த முகத்தோடு ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.
விவாதத்தில் துரைமுருகன் பங்கேற்றுச் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ஆவேசக் கூக்குரலோடு வீரமிகு வீச்சுரை நிகழ்த்தினார். அவருக்கான உரை நேரம் முடிந்து விட்டதாகக் கூறிப் பேச்சை நிறுத்திக் கொள்ளும்படி சபாநாயகர் பல முறை ஆணையிட்டும், வற்புறுத்தியும் கேட்காமல், துரைமுருகன் தொடர்ந்து அரசின் மீதான குற்றச்சாட்டுகளை பற்றிப்பிடித்து பேசிக்கொண்டே இருந்தார். சத்துணவு கூடத்தில் வழங்கப்பட்டு இருந்த ஒரு தட்டை அவர் காட்டி, "இதில் லதா என்று பொறிக்கப்பட்டு இருக்கிறது. சினிமாவில் ஜோடியாக நடித்தவர் பெயரைச் சத்துணவுக் கூடத்தின் தட்டிலா பொறிப்பது?" என்று பேசிச் சபையில் சலசலப்பை கிளப்பிவிட்டார்.
மயங்கி விழுந்த துரைமுருகன்:
திடீரென்று துரைமுருகன் தனது பேச்சை முடித்துக் கொண்டவராக, சபையை விட்டு வெளியே வந்தார். வெளியில் எதிர்க் கட்சிகளுக்கான லாபி எனப்படும் இடத்திற்கு, அவர் வந்தபோது திடீரென்று மயங்கி தரையில் விழுந்தார். அப்போது ஒலித்த சத்தத்தில் அங்கிருந்தோர் பரபரப்பாயினர். செய்தியாளர்கள் தங்கள் சட்டசபைச் செய்தியாளர் மாடத்தில் இருந்து இறங்கி துரைமுருகன் இடத்தை நோக்கி ஓடினர். நானும்தான்.
இதை கவனித்த எம்ஜிஆர், சட்டசபை மார்ஷல் பொறுப்பிலிருந்த கோபி எனும் கோபாலகிருஷ்ணனை அழைத்து விசாரித்தார்.
மடியில் தாங்கிய எம்.ஜி.ஆர்:
துரைமுருகனின் உடல்நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டதும், எம்.ஜி.ஆர் ஒரு கணம் தனது வயதினை மறந்தார். தன் பதவிக்குரிய புரோடோகால் பற்றியும் கவலைப்படவில்லை. சபைக்குள் இருந்து வேகமாக ஓடினார். அதைப் பார்த்ததும் சபையிலிருந்த உறுப்பினர்கள் எல்லோரும் பதற்றம் கொண்டவர்களாக அலறத் தொடங்கினர்.
நேரே எம்ஜிஆர் எதிர்க்கட்சிக்குரிய லாபி இருந்த இடத்திற்கு வந்தார். மயங்கி விழுந்து கிடந்த துரைமுருகனைப் பார்த்ததும், பதறி துடித்த அவர் தரையில் அமர்ந்தார். துரைமுருகனின் தலையை லாவகமாகத் தனது மடியில் இருத்தி கொண்டார். பின்னர் ஒரு தாய்க்கே உரித்தான பாசப் பரிவோடு துரைமுருகனின் கன்னங்களைத் தட்டித்தட்டி அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.
தண்ணீரை வாங்கி துரைமுருகனின் முகத்தில் பீய்ச்சி அடித்தார். தன்னிடமிருந்த கைக்குட்டையால் துரைமுருகனின் முகத்தைத் துடைத்து விட்டார். துரை முருகனின் இரு கண்களையும் தடவி கொடுத்தார். அருகில் இருந்தோர் அனைவரும் உருகி நின்றனர்.
அப்போது "தினமலர்" நாளிதழின் செய்தியாளராகச் சட்டமன்றச் செய்திகளை எழுதுவதற்காகச் சென்றிருந்தேன். சட்டமன்றச் செய்தியாளர்கள் மாடத்தில் இருந்த நான், துரைமுருகன் கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து லாபியில் நின்றிருந்தேன். எம்ஜிஆர் என்னைக் கடந்து சென்று துரைமுருகனை மடியில் ஏந்தினார்.
பாச போராட்டம்:
சுமார் 20 நிமிடங்கள் இந்த பாசப் போராட்டம் நீடித்தது. எம்ஜிஆரின் அதிரடி ஆணையையடுத்து மருத்துவக் குழு பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தது. துரைமுருகனின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவரின் ஆவேசம், அலறல், மூச்சிரைக்கும் சத்தம், அவருக்கிருந்த உடல்நிலைக் கோளாறு ஆகியவற்றால் மயங்கி விழுந்திருக்கிறார். அவரின் உணர்ச்சி வசப்பட்ட உரை காரணமாக உடலில் ரத்தக் கொதிப்பு அதிகரித்திருக்கிறது என்றெல்லாம் மருத்துவக் குழுவினர், செய்தியாளர்களிடம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அரை மணி நேரத்திற்கு முன்பு சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்த துரைமுருகன், தன் வெடி வார்த்தைகளால் எம்ஜிஆரின் இதயத்தைத் துளைத்தெடுத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் துரைமுருகன் மயங்கி விழ, மடியில் ஏந்திப் பாசம் பேசினார் எம்ஜிஆர்.
"இப்படியும் ஒரு மனிதரா!" என்று அருகில் இருந்தோர், அனைவரும் ஆச்சரியம் தாளாமல் அதிர்ந்து நின்றனர். அத்தகையோரில் அடியேனும் ஒருவன் என்ற நிலையில் அரசியலைத் தாண்டிய இந்த அன்புருக்கத்தைப் பதிவு செய்கிறேன் என மூத்த ஊடகவியலாளர் ஆர். நூருல்லா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion